Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/சரித்திரம் பழகு: இரண்டு யானைகளில் அமர்ந்து போரிட்ட மன்னர்

சரித்திரம் பழகு: இரண்டு யானைகளில் அமர்ந்து போரிட்ட மன்னர்

சரித்திரம் பழகு: இரண்டு யானைகளில் அமர்ந்து போரிட்ட மன்னர்

சரித்திரம் பழகு: இரண்டு யானைகளில் அமர்ந்து போரிட்ட மன்னர்

PUBLISHED ON : ஜூலை 01, 2024


Google News
Latest Tamil News
பல்லவ மன்னர்களில் ஒருவர் முதலாம் பரமேசுவர வர்மன் (கி.பி. 670 - -695). இவர் நரசிம்ம வர்மனின் பேரன். நரசிம்ம வர்மன் சாளுக்கிய நாட்டின் மன்னன் இரண்டாம் புலிகேசியைப் போரில் தோற்கடித்து அவர்களின் நகரான வாதாபியைத் தீயிட்டு எரித்தார். இந்தத் தீ, புலிகேசியின் மகன் முதலாம் விக்ரமாதித்தன் மனத்தில், ஆறாத ரணமாக இருந்தது.

விக்ரமாதித்தன் ஆட்சிக்கு வந்ததும், காஞ்சியின் மீது போர் தொடுக்க, பெரும்படையைத் திரட்டினார். அந்த நேரத்தில் பரமேசுவர வர்மன் போரில் ஆர்வம் காட்டாமல் கோயில்களை எழுப்புவதில் முனைப்புடன் இருந்தார். இதுதான் பல்லவர்களை வெல்ல, சரியான தருணம் என்று விக்ரமாதித்தன் காஞ்சி நோக்கி வந்தார்.

போதிய படைகள் இல்லாதக் காரணத்தால், பரமேசுவரவர்மன் போரைத் தவிர்க்க, நகரை விட்டு அகன்று விட்டார். காஞ்சியைப் பிடித்துக்கொண்ட விக்ரமாதித்தன், பாண்டிய நாட்டை நோக்கிப் படைகளைச் செலுத்தினார். பாண்டியர்களுடன், திருநெல்வேலியில் போரிட்டு, தோற்றார். தன் படைகளுடன் திரும்ப வரும்போது, பெருவளநல்லூர் என்னும் ஊரில், பரமேசுவரவர்மன் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு, விக்ரமாதித்தனை எதிர்த்தார்.

அந்தப் போர் பெரும்போராக இருந்தது. போரில் எழுந்த தூசிப் படலம் விண்ணில் பறந்து, சூரியனையே மறைத்து விட்டது. 'சூரியன் சந்திரனைப் போல் மாறிவிட்டான்' என்று பல்லவர்களின் கூரம் செப்பேடு விவரிக்கிறது. போர்க் களத்தில் யானைகள் நகர்ந்து சென்றது, கரிய மேகங்கள் நகர்வது போல் இருந்ததாம். யானைகள் நடந்து சென்ற இடங்களில் பூமியில் பள்ளங்கள் விழுந்ததாகவும் அந்தச் செப்பேடு குறிப்பிடுகிறது. கைகளில் ஆயுதங்களோடும் சிவந்த கண்களோடும் வீரரர்கள் இறந்து கிடந்தனர்.

இந்தப் போரில் பரமேசுவரவர்மன் அரிவாரணம், அதிசயம் என்னும் இரண்டு யானைகளின் மீது மாறி மாறி அமர்ந்து, போரிட்டுள்ளார். அரிவாரணம் யானையின் அம்பாரி, தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. போரில் விக்ரமாதித்தன் தோற்றோட, பரமேசுவரவர்மன் வெற்றிமாலை சூடிக்கொண்டார் எனக் கூரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சிபுரம் அருகே உள்ள கூரத்தில் கிடைத்தது இந்தச் செப்பேடு. இதில் ஏழு ஏடுகள், பதினான்கு பக்கங்கள் உள்ளன. தமிழ், சமஸ்கிருத மொழிகளில் எழுதப்பட்ட 95 வரிகள், இடம்பெற்றுள்ளன.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us