Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/சரித்திரம் பழகு: தஞ்சை மன்னரின் விருப்ப உணவு

சரித்திரம் பழகு: தஞ்சை மன்னரின் விருப்ப உணவு

சரித்திரம் பழகு: தஞ்சை மன்னரின் விருப்ப உணவு

சரித்திரம் பழகு: தஞ்சை மன்னரின் விருப்ப உணவு

PUBLISHED ON : பிப் 24, 2025


Google News
Latest Tamil News
தஞ்சையை 1600 முதல் 1634 வரை ஆட்சி செய்தவர் ரகுநாத (Raghunadha) நாயக்கர். தஞ்சையின் வர்த்தகம், கலை, இலக்கியம் வளரப் பெரும் காரணமாக இருந்தவர். இவரது மகன் விஜயராகவ நாயக்கர் (Vijayaraghava Nayak), தந்தையை மையமாக வைத்து, ரகுநாத நாயக் அப்யுதயமு (Raghunatha Nayak abhyudayamu) என்னும் நூலை எழுதி உள்ளார். அதில் அரசர் காலை எழுவது முதல், பிடித்த உணவு வரை பதிவாகி உள்ளது.

'காலை குளியலை முடித்த பிறகு, ரகுநாத நாயக்கர், பட்டு கால்சட்டை, அரைக்கை சட்டை அணிந்தார். விலையுயர்ந்த நகைகளுடன், கையணியான வங்கி, பதக்கத்துடன் கூடிய ஆரம், முத்துச்சரங்கள் கோத்த தலைப்பாகை போன்றவற்றைச் சூடினார்.

யானைக் கொட்டாரம், குதிரைலாயங்களைப் பார்வையிட்ட பிறகு, கொம்பு, அர்கஜம், தவில், பேரிகை முழங்க, மன்னர் நகர்வலம் சென்றார். கையில் அழகிய முத்துக்களால் ஆன செண்டு வைத்திருந்தார். நகர்வலம் முடிந்ததும், அரசவை வந்து மக்களுக்குத் தரிசனம் தந்து, அன்றைய அரசு அலுவல்களைக் கவனித்தார்.

மதிய உணவின் போது விரித்த ரத்தினக் கம்பளத்தின் மீது மன்னர் அமர்ந்திருந்தார். அவர் முன், கிளி, மயில் ஆகிய பறவைகள் போல் வடிவமைக்கப்பட்ட குவளைகள், கிண்ணங்கள் வைக்கப்பட்டன. பெரிய வாழை இலைகள், தங்கத் தட்டுகள் வைக்கப்பட்டன.

முதலில் பச்சடி, பிறகு பருப்பு, நெய், காய்கறிகள் பரிமாறப்பட்டன. அப்பளம், ஆறு வகையான கோழிக்கறி, வறுத்த மீன், பாயசம், இரு வகை ரசம், இரு இனிப்புகள், முறுக்கு, அதிரசம், தேன்குழல், தேனுடன் அல்லது தேன் இல்லாமல் பழங்கள் ஆகியவையும் வைக்கப்பட்டன.

இவைதவிர, தயிர் வடை, புளியோதரையும் மன்னருக்கு மிகவும் பிடித்தமானது. மன்னர் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதால் பட்டுத் திரையாலான துணி மறைக்கப்பட்டிருந்தது' என்று அந்த நூல் கூறுகிறது




      Our Apps Available On




      Dinamalar

      Follow us