கழிவுப் பொருட்களை கலைப்பொருளாக்கும் சுமதி
கழிவுப் பொருட்களை கலைப்பொருளாக்கும் சுமதி
கழிவுப் பொருட்களை கலைப்பொருளாக்கும் சுமதி
PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

வயதுக்கும் சாதனைக்கும் இடையிலான தொடர்பு இல்லை. ஆர்வமும், விடாமுயற்சியும், மன உறுதியும் இருந்தால் எந்த சாதனைகளையும் செய்யலாம். வயது தடையாக இருக்காது என்பதை பலர் நிரூபித்துள்ளனர். இவர்களில் ஒருவரே சுமதி. அவரது சாதனை அசாத்தியமாகத் தோன்றும்.
தட்சிணாகன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் பக்கிகெரே கிராமத்தில் வசிப்பவர் சுமதி, வயது 80. இவருக்குள் அதிசயமான கலைத்திறன் மறைந்துள்ளது. தேவையற்ற கழிவு பொருட்கள் இவரது கைப்பட்டால் கலைப்பொருள்களாக மாறுகின்றன. தேங்காய் ஓடு, ஸ்ட்ரா, மரத்துண்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய டயர்கள் போன்ற தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி, அழகான கலைப்பொருட்களை தயாரிக்கிறார். வீடு முழுவதும், இவரது கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் நிரம்பியுள்ளது.
வீட்டின் வழியாக செல்வோர் இந்த அலங்காரப் பொருட்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.பிளாஸ்டிக் பாட்டில்களை வண்ணமயமான பூக்களாக மாற்றியுள்ளார்; தேங்காய் ஓடுகளுக்கு சாத்துக்குடி, மாம்பழ வடிவம் கொடுத்துள்ளார். புற்களை பயன்படுத்தி கலை நயத்துடன் கூடிய கூடை உருவாக்கியுள்ளார். மண்பானைகள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்களை வண்ணங்கள் பூசி அலங்காரப் பொருட்களாக்கியுள்ளார்.


திருமணத்திற்கு பின் 35 ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். பிள்ளைகள் திருமணமான பின் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து வீடு கட்டி வசிக்கிறார். பல ஆண்டுகள் மும்பையில் இருந்தாலும், நவீன வாழ்க்கைக்கு மாறவில்லை; தன் வீட்டை கிராமிய மணத்துடன் வைத்துள்ளார்.திறமையை வெளிப்படுத்த வயதும் முதுமையோ தடையாக இருக்காது என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு.
தினமும் இரண்டு மணி நேரம் கலைப்பொருட்களை உருவாக்குவதில் ஈடுபடுகிறார். அவரது வீட்டுக்குள் சென்றால், புதிய உலகில் வந்த உணர்வு ஏற்படும். ஒவ்வொரு பொருளும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.இவரது படைப்புகளைப் பார்க்க பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுப்புற கிராமத்தினர், சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இங்குள்ள கலைப்பொருட்கள் அனைவரையும் ஈர்க்கின்றன.
சுமதியம்மாவை தங்கள் ஊருக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகின்றனர் கிராமத்தினர். இந்த வயதிலும் அவரது கலைத்திறனைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். தேவையற்ற பொருட்களை வீதியில் வீசி அசுத்தமாக்குகிறோம்; இத்தகைய பொருட்களுக்கு சுமதி கலை வடிவம் கொடுக்கிறார். அவரது பணியை நாங்கள் பாராட்டுகிறோம். இவர் மற்றவருக்கு முன்னுதாரணமாக வாழ்கிறார். இவரைப் போன்று அனைவரும் செயல்பட்டால், வீடும்,நாடும் அழகாகும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்றனர்.