PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

திவாகர் சன்னப்பா (45)
கர்நாடகா மாநிலம், பெங்களூரு ரூரல் மாவட்டம், பேகூரில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையின் விருப்பப்படி நன்றாகப் படித்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றினார்.
திடீரென சன்னப்பாவின் தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் அவர் படுத்த படுக்கையாகி விட்டார். தந்தையை மிகவும் நேசித்த சன்னப்பா, அவரை கவனிக்க கிராமத்துக்குத் திரும்பினார். அதே நேரத்தில் தன் தந்தை உயிரைப் போல நேசித்த நிலத்தையும் பராமரிக்கத் தொடங்கினார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் பெங்களூரு திரும்பியபோது, நகர வாழ்க்கையும், வேலையும் அவருக்குப் பிடிக்கவில்லை. எப்போதும் கிராம வாழ்க்கையே மனதில் சுழன்று கொண்டிருந்தது. உடனே ஒரு முடிவெடுத்து, வேலையை விட்டுவிட்டு, பேகூருக்கு திரும்பி முழுநேர விவசாயியாக மாறினார்.
அந்தக் காலத்தில் ஜப்பான் விவசாயி மசனோ புகுவோக்காவின் 'ஒரு வைக்கோல் புரட்சி' என்ற புத்தகம் அவருக்கு மேலும் ஊக்கம் அளித்தது. தந்தை போல தினை, துவரம் பருப்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களைப் பயிரிட்டார். சிறிதளவு லாபமும் கிடைத்தது.

விவசாயம் தொடர்பாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயியொருவரை சந்தித்தது அவருடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது. எகிப்து, சவுதி அரேபியா, ஓமன் போன்ற பாலைவனங்களில் மட்டுமே விளையும் பேரீச்சை நமது நாட்டிலும் விளையயும் என்று அவர் கூறினார். அந்த விவசாயியின் நிலத்தைப் பார்த்தபோது அது உண்மை என சன்னப்பாவும் உணர்ந்தார்.
பின்னர் தன்னுடைய நிலத்திலும் பேரீச்சையை நட்டு வளர்த்தார். அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் முதன்முதலில் பேரீச்சை பயிரிட்டவர் சன்னப்பாதான். ஒரு கன்றை ரூ.3,000க்கு வாங்கி, 150 கன்றுகளை நடவு செய்தார். இன்று ஒரு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வரையிலான வருமானம் கிடைக்கிறது.
நல்ல லாபம் தரும் பேரீச்சைப் பழ விவசாயத்தைப் பலருக்கும் அறிமுகப்படுத்தி வருகிறார். இப்போது அவர் ஒரு விவசாயியாக, கிராமத்தில் மகிழ்ச்சியாகவும் மனநிம்மதியுடனும் வாழ்கிறார்.
“விவசாயி என்று சொல்லிக் கொள்வதிலும், உண்மையில் விவசாயியாக இருப்பதிலும் நான் பெருமை கொள்கிறேன்” என்று உற்சாகமாகக் கூறுகிறார்.
- எல். முருகராஜ்