Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்!

டாக்டரை கேளுங்கள்!

டாக்டரை கேளுங்கள்!

டாக்டரை கேளுங்கள்!

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
ராமநாதன், மதுரை: 28 வயதான எனக்கு பொடுகு தொல்லையால் முடி அதிகம் கொட்டுகிறது. தலைக்கு தேங்காய் எண்ணெய் கலந்த மூலிகை எண்ணெய் தடவுகிறேன். தினமும் இரவு 8:00 மணிக்கு மேல் சாப்பிட்ட பின் தலைக்கு குளிர குளிர எண்ணெய் வைக்கிறேன். ஆனாலும் முடி உதிர்தல் குறையவில்லையே?

பொதுவாக தலையில் வறட்சி இருந்தால் பொடுகுத்தொல்லை வரும். காலை அல்லது மாலை 5:00 மணிக்குள் தலைக்கு எண்ணெய் தேய்க்கலாம். மேற்பகுதியில் தேய்க்காமல் முடியின் வேர்க்காலில் எண்ணெய் படும் படி தடவ வேண்டும். ஒருசிலர் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக எண்ணெய் தேய்ப்பர். தலையில் வறட்சி உள்ளவர்கள் குளித்து ஈரம் காய்ந்த பின்பே எண்ணெய் தடவ வேண்டும்.

தமிழகத்தின் தட்பவெப்பநிலைக்கேற்ப வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து 20 நிமிடம் கழித்து சிகைக்காய் தேய்த்து குளிக்கலாம். இரவில் படுக்கப் போவதற்கு முன் தலையில் எண்ணெய் வைப்பது தவறு. எண்ணெய் செலவு அதிகமாவதைத் தவிர எந்த பயனும் இல்லை.

தலையில் அதிக எண்ணெய் வைப்பதால் வறட்சி நீங்கி குளிர்ச்சி அதிகரித்து சைனசைட்டிஸ், மூக்கில் நீர் வடிதல், அலர்ஜிக் சைனசைட்டிஸ் பாதிப்பு ஏற்படும். சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை வாரம் இருமுறை தலை முதல் கால் பாதம் வரை நல்லெண்ணெய் தடவி குளிக்க வேண்டும்.

- டாக்டர் சுப்ரமணியன், அரசு சித்தா மருத்துவர் (ஓய்வு), மதுரை

சரண்யா, நத்தம்: வலிப்பு நோயின் அறிகுறிகள் என்ன?

ஒரு நபருக்கு வலிப்பு வருவதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். அதை நாம் ஆரா என்று கூறுவோம். வயிற்றில் இருந்து ஏதோ ஒன்று மேல் நோக்கி வருவது போல் வாமிட்டிங் உணர்வு இருக்கலாம். நெஞ்சில் திடீரென இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதும் படபடப்பும் இருக்கும். தொண்டையில் அடைப்பு இருப்பது போல் உணர்வும் இருக்கும். கண்ணில் வித்தியாசமான காட்சிகள் ,காதில் சத்தம் கேட்கும். ஒரு சிலருக்கு யாராவது பேசுவது போல் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் முதலில் தோன்றும். அதன் பின் அவர்களது நினைவு இழக்கும். வாயை சிலர் சவைப்பார்கள். இந்த அறிகுறிகள் மூலம் வலிப்பு ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்து அருகில் உள்ளவர்கள் முதல் உதவி செய்யலாம்.

- டாக்டர் ரவி, அரசு ஓய்வு மருத்துவர், கோபால்பட்டி

டி. சந்திரசேகரன், கூடலுார்: 50 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை அவசியம் தேவையா?

இதயநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவைகளால் மரணம் அதிகம் ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச்சத்து ஆகிய அறிகுறி இல்லாத நோய்களே திடீர் மரணத்திற்கான அடிப்படை காரணமாகும். 30 வயதிற்கு மேல் உள்ள 17 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 24 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. இது போன்ற அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்காக தொற்றா நோய் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனைகளையும் முழுமையாக செய்து முன்கூட்டியே பிரச்னைகளை கண்டுபிடித்தால் திடீர் மரணத்தை தவிர்க்கலாம்.

முழு உடல் பரிசோதனை 50 வயதுக்குமேல் என்பது இல்லை, 30 வயதிற்கு மேல் கண்டிப்பாக செய்ய வேண்டும். நமக்கு தெரியாமல் அறிகுறி இல்லாத நோயையும் கண்டுபிடிக்கலாம். சமீப காலமாக பலருக்கு கேன்சர் இருப்பது முன்கூட்டியே தெரியாமல் கடைசி கட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். அதனால் ஒவ்வொருவருக்கும் முழு உடல் பரிசோதனை அவசியம்.

- டாக்டர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடலுார்

வி.சத்தியமூர்த்தி, சாயல்குடி: பனிக்காலத்தில் குழந்தைகளை தாக்கும் நோய்கள் மற்றும் உடல் ரீதியிலான பிரச்னைகள் என்ன?

பொதுவாக பனி மற்றும் குளிர் காலங்களில் குழந்தைகள், சிறுவர்களுக்கு சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல் பிரச்னைகள் ஏற்படும். அச்சமயங்களில் வீட்டில் மின்விசிறிக்கு கீழே குழந்தைகளை படுக்க வைக்கக்கூடாது. அதிகாலை நேரங்களில் குழந்தைகளை வெளியில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இருமல், சளி, காய்ச்சல், இளைப்பு ஏற்பட்டால் சுயமாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் டாக்டரை அணுக வேண்டும்.

-டாக்டர் வி. சரவணன், கடலாடி வட்டார மருத்துவ அலுவலர், சாயல்குடி

அ.பிரகாஷ்,சிவகங்கை எனது மூன்று வயது மகனுக்கு சரியாக பேச்சு வரவில்லை. ஆட்டிசம் குறைபாடாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதன் அறிகுறிகள் என்ன?

ஆட்டிசம் ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சி குறைபாடு. இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் சமூகத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன், பழகும் திறனில் பின் தங்கி இருப்பார்கள். ஆட்டிசம் அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் பேசினால் தெளிவாக புரிந்து கொள்ளும்படி இருக்காது.

கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் உணர்வுகளில் மாறுபாடு இருக்கும். அந்த புலன் சார்ந்த துாண்டல்களுக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிகாட்டுவார்கள். குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கு காரணம் ஆட்டிசம் மட்டுமே இருக்க இயலாது. சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே பேச்சுதிறன் வர தாமதம் ஆகலாம். சந்தேகம் தொடரும் பட்சத்தில் குழந்தைகள் நல மருத்துவரிடமோ, மனநல மருத்துவரிடமோ ஆலோசனை பெற வேண்டும்.

டாக்டர் இ.லாய்ட்ஸ், மனநல மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

கி.காயத்ரி, விருதுநகர்: விழுந்ததால் காலில் வீக்கம் ஏற்பட்டு வலி தாங்க முடியவில்லை. இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

காலில் வீக்கம் ஏற்பட்டவுடன் முதலில் ஓய்வு எடுக்க வேண்டும். ஐஸ்கட்டிகள் வைத்து ஒத்தடம் கொடுத்து, வீக்கத்தை குறைக்க பேண்ட்டேஜ் சுற்ற வேண்டும். காயமடைந்த பகுதியை தலையணை பயன்படுத்தி சற்று உயரமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். இந்த முறைகள் உடனடியாக செய்ய வேண்டியது.

இதில் தசைநார் பாதிப்பா, எலும்பு முறிவா என்பதை எக்ஸ்ரே பரிசோதனை மூலம் தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும். எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தால் சரியான நிலையில் வைத்து கட்டு போட்டால் சரியாகிவிடும். தசைநார் பாதித்து இருந்தால் அதற்கு உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் வீக்கம் குறைந்து குணமடைய முடியும்.

- டாக்டர் எஸ்.சுல்தான் முகமது இப்ராஹிம், எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், விருதுநகர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us