Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/இரு வாரங்கள் இருமல் இருந்தால் நுரையீரல் பரிசோதனை அவசியம்

இரு வாரங்கள் இருமல் இருந்தால் நுரையீரல் பரிசோதனை அவசியம்

இரு வாரங்கள் இருமல் இருந்தால் நுரையீரல் பரிசோதனை அவசியம்

இரு வாரங்கள் இருமல் இருந்தால் நுரையீரல் பரிசோதனை அவசியம்

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
மழை துவங்கி விட்டது. பல்வேறு பணிகளுக்காக மழையில் அலைபவர்கள் சிலர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இருந்தால், ஜலதோஷம், இருமல் மட்டுமே ஏற்படும். ஆனால், இந்த குளிர்காலநிலை, ஆஸ்துமா நோயாளிகளை பாடாய்படுத்தி விடும்.

இப்பிரச்னையில் இருந்து மீள, என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது? நெஞ்சக சிகிச்சை நிபுணர் டாக்டர் கவுதமனிடம் கேட்டோம்.

ஆஸ்துமா பாதிப்பு என்பது என்ன , எதனால் ஏற்படுகிறது ?

இப்பாதிப்பு, மரபணு காரணமாகவே பெரும்பாலும் ஏற்படுகிறது. சமீபத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக காற்று கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மூச்சுக்குழாய் சுருங்குதல், விரிதல் காரணமாகவும், அதிகமான சளி கோர்த்து சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும். தொடர்ந்து சிகிச்சை எடுப்பதன் வாயிலாக, இயல்பான வாழ்க்கை வாழ இயலும்.

இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ?

ஆஸ்துமா பாதிப்பு என்பது, மூச்சுத்திணறல் போல்தான் இருக்கும் என பலர் தவறாக நினைத்து இருக்கின்றனர். மூச்சுத்திணறல் மட்டுமின்றி, நாள்பட்ட இருமலும் இதற்கான அறிகுறியே. அடிக்கடி சளிப்பிடிப்பது, மூச்சுவிடும் போது நெஞ்சு பகுதியில் விசில் சத்தம், 'கர் கர்' என்ற சத்தம் கேட்பதும் அறிகுறிதான்.

குழந்தைகளுக்கு சளி, இருமல் இயல்பாக ஏற்படும். அதை ஆஸ்துமா என எப்படி அறிவது?

இந்தியாவில், 6 கோடி பேர் இப்பாதிப்புடன் உள்ளனர். அதில், 6 முதல் 15 சதவீதம் பேர் குழந்தைகளாக உள்ளனர்.

குழந்தைகளுக்கு இருமல், சளி ஏற்படுவது அடிக்கடி இருந்தாலோ, மருந்து கொடுத்தும் கட்டுப்படாமல் இருந்தாலோ, இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருந்தாலோ , குடும்பத்தில் யாருக்கேனும் இப்பாதிப்பு இருந்தாலோ, நுரையீரல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். துாசு, குளிர், மழை, போன்று அலர்ஜி உள்ளவற்றை தவிர்ப்பது நல்லது. அனைவருக்கும் அலர்ஜி ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறமுடியாது.

மரபணு வாயிலாக ஏற்படும் என்றால், அனைவருக்கும் தொடருமா?

பரம்பரையில் யாருக்கேனும் இருப்பின், கட்டாயம் அவர்களின் உடனடி வாரிசுகளுக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடுத்தடுத்த வாரிசுகளுக்கு ஏற்படலாம். இப்பாதிப்பு சிறு வயதில் தெரியாமல் இருக்கும்; சுற்றுச்சூழல், நாய், பூனை, மகரந்தப்பூ போன்ற காரணிகளால் துாண்டல் ஏற்படுவதால், வரலாம்.

சிகிச்சை முறைகளை டாக்டர்கள் பரிந்துரைத்தபடி தொடர்ந்து எடுத்துக்கொண்டால், இயல்பான வாழ்க்கை வாழமுடியும். பிரிட்ஜ்ஜில் வைத்து உண்ணும் உணவை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, நாய், பூனை போன்றவற்றை வளர்க்க விரும்புபவர்கள், சிறுவயதிலேயே துவக்கிவிட்டால், உடல் அதற்கேற்ற எதிர்ப்பு சக்தியை உருவாக்கிகொள்ளும் என ஆய்வுகள் கூறுகின்றன. வளர்ந்த பின் திடீரென்று வளர்ப்பது, ஆஸ்துமா ஏற்படுத்தும் காரணியாக மாறலாம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us