Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/வயதான பெற்றோரின் பாதுகாப்புக்கு: 'பறக்கும்' பிள்ளைகள் செய்ய வேண்டியவை

வயதான பெற்றோரின் பாதுகாப்புக்கு: 'பறக்கும்' பிள்ளைகள் செய்ய வேண்டியவை

வயதான பெற்றோரின் பாதுகாப்புக்கு: 'பறக்கும்' பிள்ளைகள் செய்ய வேண்டியவை

வயதான பெற்றோரின் பாதுகாப்புக்கு: 'பறக்கும்' பிள்ளைகள் செய்ய வேண்டியவை

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
தற்போதைய சூழலில் பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். அவ்வாறு செல்லும் பலர், பல ஆண்டுகள் அங்கேயே செட்டில் ஆவதை விரும்புகின்றனர்.

இதுபோன்று, வெளிநாடுகளுக்கு செல்லும் முன், தனியாக இருக்கும் பெற்றோரின் பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன், சில ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவசியம்.

நம்பிக்கையான நபர்

பெற்றோர் அவசர சமயங்களில், உடனடியாக வந்து உதவி செய்யும் வகையில், உறவினர்கள், நண்பர்களிடம் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

அவசரத்திற்கு வருபவர்களின் எண்களை பெற்றோர் மொபைல் போனில் பதிந்து கொடுக்கவேண்டியது அவசியம்.

மொபைல் போன் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு, சுவற்றிலேயே அதற்கான ஓர் இடம் தேர்வு செய்து, அவசர அழைப்பு எண்கள் அனைத்தும் எழுதி வைக்கவேண்டியது அவசியம்.

கேமராக்கள்

தற்போதைய சூழலில், தனித்து இருக்கும் முதியவர்களே, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு அதிகம் ஆளாவதை காணமுடிகிறது. இதனால், வீட்டில் வெளிப்புறம், உட்புறம் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்துவதுடன்; முடிந்தால் வெளிநாட்டில் இருந்து கேமராக்கள் வழியாக பேசும் வசதிகளையும் ஏற்படுத்தலாம். பாதுகாப்பு அலாரம் போன்றவற்றை அமைத்துக்கொடுக்கலாம்.

மருத்துவமனை விபரங்கள்

பெற்றோர் உடல் நிலை பொறுத்து, வெளிநாடு செல்லும் முன்னரே வீட்டின் அருகில், குறிப்பிட்ட மருத்துவமனை, மருத்துவர்களை தேர்வு செய்து அறிமுகம் செய்துவிடவேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வதை, உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

தவறாமல் அழைப்பு

எத்தனை தான் வேலை இருந்தாலும், முடிந்த அளவில் தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது, பெற்றோரிடம் வீடியோ அழைப்பு வாயிலாக, மனம் விட்டு பேசி, அவர்களின் மகிழ்ச்சி, வருத்தங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆவணங்கள் அவசியம்

பெற்றோருக்கு பாஸ்போர்ட், விசா போன்ற முக்கிய ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். மருத்துவம் சார்ந்த ஆவணங்களை முறையாக ஓரிடத்தில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.

உதவியாளர்

நிதிசார்ந்த நெருக்கடி இல்லாதவர்கள், பராமரிப்பு உதவியாளர்களை நியமிப்பது, வயதான காலத்தில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கும்.

வருகை அவசியம்

வெளிநாடு செல்லும் பிள்ளைகள் பலர், பணம் கட்டுக்கட்டாக அனுப்பினாலும் கிடைக்காத மகிழ்ச்சி பிள்ளைகளை நேரடியாக பார்க்கும் போது, அவர்களுக்கு கிடைக்கும். முடிந்தளவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பேரன், பேத்திகளுடன் வந்து, அவர்களுடன் நேரம் செலவிட வேண்டியது கட்டாயம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us