Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் சிக்-குன் குனியா டெங்கு காய்ச்சல் இரு மாதங்களில் 47 பேர் பாதிப்பு

மதுரையில் சிக்-குன் குனியா டெங்கு காய்ச்சல் இரு மாதங்களில் 47 பேர் பாதிப்பு

மதுரையில் சிக்-குன் குனியா டெங்கு காய்ச்சல் இரு மாதங்களில் 47 பேர் பாதிப்பு

மதுரையில் சிக்-குன் குனியா டெங்கு காய்ச்சல் இரு மாதங்களில் 47 பேர் பாதிப்பு

ADDED : ஆக 24, 2010 03:03 AM


Google News

மதுரை: சுகாதாரமற்ற சுற்றுப்புறச்சூழல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறைவு போன்ற காரணங்களால், மதுரையில் மீண்டும் சிக்-குன் குனியா, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

தவிர, டைப்பாய்டு காய்ச்சலும் அதிகமாக பரவுகிறது. அரசு மருத்துவமனையில் தினமும் குறைந்தது 5 பேருக்கு டைப்பாய்டு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. லேசாக மழை பெய்தாலே, மனிதனின் உடல்நலம் பாதித்து, காய்ச்சலால் பாதிக்கப்படுவது வழக்கம்.  தேங்கிய தண்ணீர், குப்பைகள், கழிவுநீர் போன்றவற்றால், நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. தவிர, சுத்தமான தண்ணீரில்கூட கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை பரப்புகிறது. 'ஈடிஸ் எகிப்டி' எனும் கொசுவே, டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சலுக்கு காரணமாகிறது. இதோடு மஞ்சள் காய்ச்சலையும் உண்டாக்குகிறது. இக்கொசு சுத்தமான தண்ணீரில் ஏற்படும். வாஷ்பேசின், காலியான வாட்டர் கேன்கள், தென்னை நார்கள், பழைய டயர்களில் உற்பத்தியாகி, பகலில் கடிக்கும். இக்காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  47 பேர் பாதிப்பு : மதுரை மாவட்டத்தில் இரு மாதங்களாக டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கடந்த மாதம் 12 பேருக்கு டெங்கும், 19 பேருக்கு சிக்குன்குனியாவும் உறுதி செய்யப்பட்டது. இம்மாதம் நேற்று வரை முறையே 9 பேர், 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரு மருத்துவ மாணவியரும்  அடங்குவர். தவிர, டைப்பாய்டு காய்ச்சலும் பரவலாக உள்ளது. கிராமப்பகுதிகளில் தினமும் குறைந்தது 45 பேர், பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதில், குறைந்தது 5 பேருக்கு இக்காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. இதைதொடர்ந்து நோயாளிகளின் கிராமங்களில் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மதுரை அரசு டாக்டர் சங்குமணி கூறியதாவது : கொசு கடித்தவுடன் இரண்டு அல்லது ஏழு நாட்களில் காய்ச்சல், தலைவலி, கண் பட்டையில் வலி, முதுகுவலி ஏற்படும். உடலில் உள்ள அனைத்து பாகங்கள் மற்றும் எலும்புகளில் வலி ஏற்படும். தோலில் அம்மை போன்று, சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். தொண்டை புண்ணும்  ஏற்படும். கண் சிவந்து காணப்படும்.  இதோடு, பசியின்மை, வாந்தி இருப்பதோடு, சில நேரங்களில் கண் கூசும். உடலில் எரிச்சல்  ஏற்படும். மூக்கில் ரத்தம் ஏற்படலாம். ரத்தவாந்தியும் எடுக்க வாய்ப்புள்ளது. ரத்தம் உறைய பயன்படும் தட்டை அணுக்களின் அளவு குறைகிறதா என பார்க்க வேண்டும். குறைந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், உடலில் ஆங்காங்கே ரத்தக்கசிவு ஏற்படும்.  குடிநீரை சூடுப்படுத்தி அதிகம் பருகவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் மற்றும் உடல் அரிப்புக்குரிய மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?சமீபகாலமாக வைரஸ் காய்ச்சலாலும் அதிகம் பேர் பாதிக்கின்றனர். இம்மழையால் இழைப்பு நோய், மார்புச் சளி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பு ஒருவாரம் வரை இருக்கும். காய்ச்சல் 102 டிகிரி இருக்கும். உடல் வலி ஏற்படும்.   டாக்டர்கள் கூறியதாவது :'ஆர்.எஸ்.வி' எனும் வைரஸ், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கி, நுரையீரலை பாதிக்க செய்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. பல குழந்தைகளுக்கு தீவிர இழைப்பு நோயாக மாறும். தேங்கும் மழைநீரால் தொற்றுநோய்கள், மக்கள் கூடும்  இடங்களில் மற்றவருக்கு பரவ வாய்ப்புள்ளது.  இது ஏற்படாமல் இருக்க, தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வெயில் அடிக்கும் போது துணிகளை காயபோட வேண்டும் என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us