/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/எழுத்துப்பிழை உள்ள பத்திரத்தை நம்பி சொத்து வாங்கலாமா? எழுத்துப்பிழை உள்ள பத்திரத்தை நம்பி சொத்து வாங்கலாமா?
எழுத்துப்பிழை உள்ள பத்திரத்தை நம்பி சொத்து வாங்கலாமா?
எழுத்துப்பிழை உள்ள பத்திரத்தை நம்பி சொத்து வாங்கலாமா?
எழுத்துப்பிழை உள்ள பத்திரத்தை நம்பி சொத்து வாங்கலாமா?
ADDED : ஜூன் 01, 2024 08:18 AM

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதற்கான பத்திரங்கள் முறையாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டியது அடிப்படை விஷயம். இதில், முதன்முதலாக சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடும் பலருக்கும், பத்திரங்களில் உள்ள விபரங்கள் குறித்த முறையான புரிதல் இருக்காது.
இதனால், பெரும்பாலான மக்கள் 'லீகல்' பார்ப்பது என்ற பெயரில் பத்திரங்களை வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்து சரி பார்க்கின்றனர். இதில், அந்த சொத்து தொடர்பான பத்திரங்களின் உண்மை தன்மை, அது தொடர்பான வில்லங்கம் எதுவும் உள்ளதா என்பதை வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர்.
இது போன்று வழக்கறிஞரின் 'லீகல் ஒபீனியன்' எனப்படும் அறிக்கை இருந்தால் போதும் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் சொத்து வாங்குகின்றனர். இதில், பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்களில் ஏதாவது எழுத்துப்பிழை உள்ளதா, ஏற்கனவே எழுத்துப்பிழை திருத்தப்பட்டதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
குறிப்பாக, பெரும்பாலான சமயங்களில், சொத்து குறித்த முன் ஆவணங்களை வழக்கறிஞர் பார்த்து சான்றளித்த நிலையில், ஆவண எழுத்தர் வாயிலாக புதிய கிரைய பத்திரம் தயாரிக்கப்படும். அப்போது, அந்த சொத்து குறித்து பழைய பத்திரத்தில் உள்ள விபரங்கள் அடிப்படையில் தான் கிரைய பத்திரம் எழுதப்படும்.
இத்தகைய சூழலில் பழைய பத்திரம் சரியாக இருப்பதால் தானே சார் பதிவாளர் அதை பதிவு செய்து கொடுத்துள்ளார். அப்படி இருக்கும் போது பழைய பத்திரத்தில், எவ்வித பிழைகளும் இருக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொத்துவாங்கும் மக்கள் பரவலாக நம்புகின்றனர்.
பொதுவாக வீடு, மனை தொடர்பான பத்திரங்களை முன்பு போன்று யாரும் எழுதி பதிவுக்கு தாக்கல் செய்வதில்லை. ஆவண எழுத்தர் மேற்பார்வையில் தட்டச்சு செய்து தான் பெரும்பாலான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படுகின்றன என்பதால், இதில் சிறிய அளவில் ஏதாவது எழுத்து பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சொத்தின் சர்வே எண், பரப்பளவு, விற்பவரின் முகவரி போன்ற தகவல்களில் தட்டச்சு நிலையில் ஏதாவது பிழைகள் ஏற்படலாம். இவ்வாறு தட்டச்சு பிழைகள் இருப்பது, அந்த பத்திரம் பதிவு செய்யப்பட்டு சில ஆண்டுகள் கழித்து தெரியவந்து இருக்கலாம்.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் சார்-பதிவாளரை அணுகி, பத்திரத்தில் காணப்படும் பிழைகளை திருத்தி இருக்கலாம். தற்போது உங்களிடம் காட்டப்படும் பத்திரத்தில் திருத்தங்கள் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.இது விஷயத்தில் அலட்சியம் காட்டினால், தவறான விபரங்கள் அடிப்படையில் புதிய கிரைய பத்திரம் தயாரிக்கும் நிலை ஏற்படும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.