Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/கட்டடத்துக்கான கம்பி வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கட்டடத்துக்கான கம்பி வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கட்டடத்துக்கான கம்பி வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கட்டடத்துக்கான கம்பி வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ADDED : ஜூன் 01, 2024 08:15 AM


Google News
Latest Tamil News
புதிதாக கட்டடம் கட்டும் போது அதில் எந்தெந்த இடங்களில் கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வரைபட தயாரிப்பு நிலையிலேயே திட்டமிட வேண்டும். இதற்கான இடங்கள் எவை என்பது உறுதியான நிலையில் ஒவ்வொரு இடத்தின் தன்மை, தேவை குறித்த விபரங்களை அறிய வேண்டும். கட்டடத்தில் கான்கிரீட் போடப்படும் அனைத்து இடங்களிலும் கம்பிகள் உள்ளீடாக வைக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், இந்த இடங்கள் ஒவ்வொன்றும் அதன் அமைவிடம் அடிப்படையில் வேறுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக, அஸ்திவாரத்தின் அடித்தள பகுதியில் என்ன வகை கம்பி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்தால் போதும், அனைத்து பாகங்களுக்கும் அதே கம்பியை பயன்படுத்தலாம் என்று மக்கள் நினைக்கின்றனர். அஸ்திவாரத்தின் அடித்தளத்தில் பயன்படுத்தப்படும் கம்பி, கட்டடத்தின் பிற பாகங்களுக்கு பொருந்தாது.துாண்களுக்கும், பீம்களுக்கும் கூட ஒரே வகை கம்பிகளை பயன்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர வேண்டியது அவசியம். கட்டடத்தின் மொத்த சுமை என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தாங்கும் திறன் உடைய கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதலில் தேர்வு செய்ய வேண்டும்.

இதில், 10 மி.மீ., கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் செலவு குறைப்பு என்ற கோணத்தில் அதைவிட குறைந்த வகை கம்பிகளை பயன்படுத்தக் கூடாது. சில சமயங்களில் கடையில் அந்த குறிப்பிட்ட வகை கம்பிகள் கிடைக்காத நிலையில், குறைந்த எடையுள்ள கம்பிகளை கூடுதல் எண்ணிக்கையில் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.இது போன்ற நிலையில், பரிந்துரைக்கப்பட்டதற்கு மாற்றாக வேறு கணக்கில் கம்பிகளை தேர்வு செய்து பயன்படுத்தினால், அது சார்ந்த பல்வேறு குழப்பங்கள் ஏற்படும்.

குறிப்பாக, துாண்கள், பீம்களில் ஒரு கம்பியுடன் நீட்சியாக இன்னொரு கம்பியை இணைத்து பயன்படுத்த வேண்டிய கட்டங்கள் வரும். இத்தகைய சூழலில், இரண்டு கம்பிகளையும் சேர்த்து வைத்து முடுக்கு கம்பிகளை பயன்படுத்தி இணைத்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். இது போன்ற இணைப்புகள் கான்கிரீட் கலவை கொட்டப்படும் நிலையில் விலகாமல் நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறிதான்.

எனவே, இது போன்ற இணைப்பு இடங்களில் கம்பிகளின் நுனியில் திருகு ஏற்படுத்த நவீன கருவிகள் வந்துவிட்டன. இதை பயன்படுத்தி, திருகு அடிப்படையில் டி.எம்.டி.,, கம்பிகளை இணைத்து கான்கிரீட் கட்டுமான பணிகளை மேற்கொள்வது நிலைப்பு தன்மையை உறுதி செய்யும். கட்டுமான பணிக்காக நீங்கள் வாங்கும் கம்பி, வந்து சேரும் நிலையில், அதில் துரு உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா என்று பாருங்கள். மழையில் போட்டு வைத்த கம்பி அதில் கலந்து வந்திருந்தால் உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us