/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/வீட்டில் நீர்க்கசிவு ஏற்படுவதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?வீட்டில் நீர்க்கசிவு ஏற்படுவதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?
வீட்டில் நீர்க்கசிவு ஏற்படுவதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?
வீட்டில் நீர்க்கசிவு ஏற்படுவதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?
வீட்டில் நீர்க்கசிவு ஏற்படுவதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?
ADDED : ஜூன் 15, 2024 08:04 AM

புதிதாக வாங்கிய வீட்டில் குடியேறியபின், சில ஆண்டுகளில் மழைக்காலங்களை கடந்த நிலையில் தான் வீட்டில் எந்தெந்த பகுதிகளில் நீர்க்கசிவு ஏற்படுகிறது என்பது தெரியவரும். பெரும்பாலான மக்கள் மேல் தளத்தில் தேங்கும் தண்ணீர் மெல்ல கசிந்து, உள்பக்கம் வெளிப்படும் போது தான் பிரச்னையை அறிகின்றனர்.
இதன் பின் தான் அந்த கட்டடத்தில் நீர்க்கசிவு தடுப்புக்கான பணிகளில் என்ன செய்ய வேண்டும் என்று பொறியாளர்களை நாடுகின்றனர். ஆனால், பாதிப்பு ஏற்பட்ட பின் அதை சரி செய்வதை காட்டிலும், பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை முன்கூட்டியே அறிந்து சரி செய்வது தான் புத்திசாலித்தனம்.
பெரும்பாலான கட்டடங்களில், கட்டுமான பணியின் போது, துாண்கள், பீம்கள், மேல்தளம் ஆகிய பகுதிகளுக்கான கான்கிரீட் கொட்டும் நிலையிலேயே நீர்க்கசிவு தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்த பாகங்களுடன் சுவர் இணையும் இடங்களில் தான் நீர்க்கசிவு பிரச்னைகள் தெரியவரும்.
எனவே, கான்கிரீட் தளம் உள்ளிட்ட பாகங்களுடன் சுவர் இணையும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நீர்க்கசிவு தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக பெரிய அளவில் எதுவும் செய்ய வேண்டாம், கான்கிரீட் பாகங்களில் வழவழப்பான பகுதியை கொத்தி, சுவருக்கான கலவை முறையாக ஒட்ட ஏற்பாடு செய்தால் போதும்.
இது போன்ற இடங்களில் கான்கிரீட் மற்றும் கட்டு வேலை கலவையில் நீர்க்கசிவு தடுப்பு ரசாயனங்களை பயன்படுத்தலாம். கட்டுமான நிலையிலேயே இந்த பணிகளை சிறிது கவனம் செலுத்தினால் முறையாக செய்து முடித்துவிடலாம் என்பது வழக்கமாக உள்ளது.
மழைக்காலத்தில் வீடுகளின் அனைத்து அறைகளிலும் மேல் தளம், மேல் தளத்துடன் துாண்கள் இணையும் இடங்கள், சுவர் இணையும் இடங்களில் ஈரப்பதம் தெரிகிறதா என்று பாருங்கள். சில இடங்களில் சுவர்களில் அடிக்கப்பட்டுள்ள வண்ணத்தில் லேசாக வேறுபாடு தெரிந்தாலும் உரிமையாளர்கள் அலெர்ட் ஆக வேண்டியது அவசியம்.
முதல் முறையாக தெரியும் போது லேசான அளவிலேயே நீர்க்கசிவு உள்ளது; அடுத்த ஆண்டுகளில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியம் காட்டாதீர்கள். கட்டடத்தின் உள்பக்கம் லேசாக தெரிந்தாலும், அதற்கு முன் மேல் தளத்தில் நீர் இறங்கி இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் கட்டடத்தின் வெளிப்புறத்தில் நீர்க்கசிவுக்கான வாய்ப்புள்ள இடங்களை சீரமைக்க வேண்டியது அவசியம். புதிய வீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே சீரமைப்பு பணியா என்று யோசிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.