/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ டீ.டி.சி.பி., அனுமதி இல்லாமல் மனை வாங்கினால் என்ன செய்ய வேண்டும்? டீ.டி.சி.பி., அனுமதி இல்லாமல் மனை வாங்கினால் என்ன செய்ய வேண்டும்?
டீ.டி.சி.பி., அனுமதி இல்லாமல் மனை வாங்கினால் என்ன செய்ய வேண்டும்?
டீ.டி.சி.பி., அனுமதி இல்லாமல் மனை வாங்கினால் என்ன செய்ய வேண்டும்?
டீ.டி.சி.பி., அனுமதி இல்லாமல் மனை வாங்கினால் என்ன செய்ய வேண்டும்?
ADDED : மே 23, 2025 11:45 PM
கோவை மாவட்டம், துடியலுார் அருகே அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 4 சென்ட் இடம் மற்றும், 1,000 சதுரடியில், 20 ஆண்டுகள் பழமையான ஆர்.சி.சி., வீடு விற்பனைக்கு வருகிறது. வீட்டின் முன்புறம் உள்ள ரோட்டின் அகலம், 15 அடி உள்ளது. என்ன விலைக்கு வாங்கலாம்?
-நித்யாஸ்ரீ, கோவை.
இதில் தெரு, 15 அடிதான் என்பது பாராட்டத்தக்க அம்சம் அல்ல. தரை மற்றும் முதல் தளம் மட்டுமே கட்ட முடியும். நீங்கள் சொல்லும் இடம் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து, 1.5 முதல், 2 கி.மீ., துாரத்தில் இருந்தால், அதன் மதிப்பு சென்டிற்கு ரூ.13 லட்சம் என எடுத்துக்கொண்டால், கட்டடத்திற்கு ஒரு சதுரடிக்கு ரூ.1,000 வீதம், 1,000 சதுரடிக்கு கணக்கிட்டால் ரூ.10 லட்சமாகும். எனவே, ரூ.60 முதல், 62 லட்சத்துக்கு வாங்கலாம்.
நான் கோவை மாநகரில் வசிக்கிறேன். எனக்கு டீ.டி.சி.பி., மற்றும் எல்.பி.ஏ., என்றால் என்ன என்பதை விவரிக்கவும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எத்தனை சதுரடிகள் அனுமதி வாங்கலாம். கிராம பஞ்சாயத்தில் எத்தனை சதுரடிகள் அனுமதி வாங்கலாம்.
-செல்வராஜ், கோவை.
டீ.டி.சி.பி., என்பது தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்பு துறை. எல்.பி.ஏ., என்பது உள்ளூர் திட்ட குழுமம். கடந்த சில ஆண்டுகளாக இரண்டும் இணைந்து டீ.டி.சி.பி., என்று அழைக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து இவை அனைத்திலுமே, 2,500 சதுரடி மனை பரப்பில் தரை மற்றும் முதல் தளம் கட்டடமாக, 3,500 சதுரடி கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை. சுய சான்றிதழ் அதற்குரிய படிவங்களும், கட்டணமும் செலுத்தினாலே போதுமானது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் மெயின் ரோட்டில் அமைந்துள்ள, 2 பிஎச்கே பிளாட், வடவள்ளியில் இருந்து, 2.5 கி.மீ., தொலைவில், 1,150 சதுரடிகள் சூப்பர் பில்டப் பகுதியாகவும், 550 சதுரடிகள் யு.டி.எஸ்., ஆகவும், முதல் தளத்தில் கிழக்கு பார்த்த புதிய வீட்டை என்ன விலைக்கு வாங்கலாம்.
-சுலைமான், கோவைப்புதுார்.
தாங்கள் கூறிய இடத்தில், தற்போது அதிக அபார்ட்மென்ட்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, தொண்டாமுத்துார் ரோடானது பேரூர் செல்வதற்கும், சிறுவாணி செல்வதற்கும் மற்றொரு வழியாக உள்ளது. இந்த வீட்டுக்கு வாடகையாக ரூ.15 ஆயிரம் கிடைக்கப்பெற்றால், இதன் மதிப்பு ரூ.60 லட்சமாகும்.
நீண்ட நாட்களுக்கு முன், வடசித்துார் பகுதியில் காற்றாலைக்கு அருகே, 5 சென்ட் மனைப்பிரிவு வாங்கியிருந்தேன். அன்றைய தேதியில் டீ.டி.சி.பி., அனுமதி, பஞ்சாயத்து அனுமதி என ஏதும் தெரியாத நிலையில் வாங்கிவிட்டேன். விலை போகுமா?
-சக்திவேல், கோவை.
கவலை வேண்டாம். 2016ம் ஆண்டுக்கு முந்தைய கிரயமாக இருந்தால் உடனடியாக அதை வரன்முறைப்படுத்த, அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும். தங்களை போன்றவர்களுக்காக, அரசு இந்த சலுகையை வரும் ஜூன், 25ம் தேதி வரை நீட்டித்துள்ளது. உடனே செயல்படவும்.
தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.