Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ தோளில் அமர வைத்து ஜாலியா ஊர் சுற்றலாம்

தோளில் அமர வைத்து ஜாலியா ஊர் சுற்றலாம்

தோளில் அமர வைத்து ஜாலியா ஊர் சுற்றலாம்

தோளில் அமர வைத்து ஜாலியா ஊர் சுற்றலாம்

ADDED : ஜூன் 28, 2025 10:34 AM


Google News
Latest Tamil News
''மெல்லிய உடலமைப்பு, நீண்ட வால், வித்தியாசமான நிறங்களில் காட்சியளிக்கும், கோனுார் வகை கிளிகள், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால், அவற்றை பார்த்தாலே உற்சாகம் தொற்றி கொள்ளும்,'' என்கிறார், பறவை ஆர்வலர் ஜான்வெஸ்லி.

சென்னை, அசோக்நகரில், சென்னை பெட் கார்னர் என்ற எக்ஸாடிக் வகை செல்லப்பிராணி கடை உரிமையாளரான இவர், கோனுார் வகை பறவைகள் பற்றி, நம்மிடம் பகிர்ந்தவை:

அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட, கோனுார் வகை கிளிகள், எப்போதும் சுறுசுறுப்பாக விளையாடி கொண்டே இருக்கும். இது அளவில் சிறியதாக இருப்பதால், 2 அடி கூண்டே போதுமானது. சன் கோனுார் கிளி தான், இவ்வகையில் சற்று பெரியதாக இருக்கும். கிட்டத்தட்ட 30 செ.மீ., வரை வளரும். பச்சை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட, 5 வண்ணங்களில் காணப்படும், மற்ற வெரைட்டி கோனுார் கிளிகள் அளவில் சிறியவை.இவை, அதிகபட்சம் 26 செ.மீ., உயரமே வளரும்.

வெவ்வேறு வண்ணங்களை குழைத்து, தலை, உடல், கழுத்து, சிறகு பகுதிகளில் அப்பியது போல, காட்சிக்கு அழகாக இருப்பதால், இது சிறகு விரிக்கும் அழகை ரசித்து கொண்டே இருக்கலாம். சன் கோனுார் வகை கிளி மட்டும் சற்று சத்தம் எழுப்புவதால், தனி வீடுகளில் வளர்ப்பது சிறந்தது. மற்ற வெரைட்டி கோனுார் கிளிகள், அப்பார்ட்மெண்டில் வளர்க்க ஏற்றவை.

சிறியதாக இருக்கும் போதே, இதற்கு 'ஹாரன்ஸ்' என்ற பறவைக்கான பெல்ட் பொருத்தி, தோளில் அமர வைத்து பழக்கப்படுத்தினால், பின்னாளில்ஊர் சுற்ற கிளம்பும் போதெல்லாம், உடன் எடுத்து செல்லலாம். பழங்கள், விதைகள், பயறு வகைகளை இவை விரும்பி சாப்பிடும். பறவையின் ஒவ்வொரு நிலை வளர்ச்சிக்கு ஏற்ப, மல்டிவிட்டமின் டானிக் கடைகளில் கிடைக்கின்றன.

உணவு ட்ரே, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை தினசரி சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். இதில் அலட்சியாக இருந்தால், நோய் தொற்று ஏற்படலாம்.

செல்லப்பிராணியாக பறவை வளர்ப்பவர்கள், ஒரு பறவை வாங்குவதே சிறந்தது. அப்போது தான் அது உரிமையாளருடன் நெருங்கி பழகும். ஜோடியாக வாங்கினால், அவை ஒன்றோடொன்று மட்டுமே விளையாடும். வீட்டிலுள்ளோரிடம் எளிதில் நெருங்காது.

புதிதாக பறவை வளர்ப்பவர்கள், கோனுார் வகை பறவை வாங்கலாம். இதை பராமரிப்பது எளிது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் எளிதில் நெருங்கிவிடும். நீங்கள் பேசினால், அதன் கொஞ்சும் மொழியில் பதிலளிக்கும். இதன் சிணுங்கும் குரலை கேட்டாலே, மனம் லேசாகிவிடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us