Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ 'இவர்கள்' இப்படி!

'இவர்கள்' இப்படி!

'இவர்கள்' இப்படி!

'இவர்கள்' இப்படி!

ADDED : ஜூன் 22, 2025 11:16 AM


Google News
Latest Tamil News
நீலகிரி கென்னல் கிளப் சார்பில், குன்னுாரில், சமீபத்தில் நடந்த நாய் கண்காட்சியில், பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்றன. இதில், பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த சில இன நாய்களும் அவற்றின் தனித்துவமான குணங்களும் இதோ:

ராஜபாளையம்: போர் வீரன்


விசுவாசம், சுறுசுறுப்பு கொண்ட புத்திசாலி. காவல் நாயான ராஜபாளையம் கம்பீர நடையுடன், வேட்டையாடும் தன்மை கொண்டது. 32 முதல் 42 கிலோ வரை எடை கொண்டது. இந்திய ராணுவ வரலாற்றில் கர்நாடகா, பாலிகர் போர்களில் முகாம்களை பாதுகாக்கவும், எதிரிகளை கண்காணிக்கவும், வீரர்களுக்கு உதவியுள்ளது.

புல் மஸ்தீப்: விசுவாசி


இங்கிலாந்தில் தோட்டங்களை பாதுகாக்க, வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டது. அச்சுறுத்தும் தோற்றம் இருந்தாலும் பாசமான மனநிலைக்கு பெயர் பெற்றது. பாதுகாப்புக்கு இயல்பான உள்ளுணர்வை கொண்ட இவை, குடும்பத்தினருக்கு விசுவாசமாகவும், அர்ப்பணிப்புடன் பாதுகாவலனாகவும் உள்ளது.

பாக்சர்: ஆயுத படை துாதுவர்


கடந்த, 19ம் நூற்றாண்டில் கரடி, பன்றி, மான் போன்றவை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் இனம். கண்காணிப்பு, ஆயுத படைகளில் துாதுவராக பணியாற்றியுள்ளது. பின்னங்கால்களில் அசையாமல் நின்று பாதங்களால் குத்துச்சண்டை செய்யும் திறன் உள்ளதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது.

கிரேட் டேன் வேட்டையன்


ஜெர்மனியில் உள்ள மிக உயரமான நாய் இனங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 71-90 செ.மீ., உயரம் கொண்டது. அன்பு, பாசத்துக்கு இது அடிமை என்பதால், பல வீடுகளில் குடும்ப உறுப்பினராகவும், குடும்பத்துக்கு பாதுகாவலனாகவும் உள்ளது. குழந்தைகளுடன் நன்றாக பழகும் செல்லப்பிராணியான இது, ஆரம்ப காலத்தில், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

கிங் கவாலியர் ஸ்பானியல்: பிடிவாதக்காரன்


மினியேச்சர் வகையில் பொம்மை போன்று உள்ளதால் அனைவரையும் ஈர்க்கிறது. ஸ்பெயின் பெயரில் உள்ள இந்த நாய்கள் பிரான்ஸ், இங்கிலாந்தில் அதிகம் வளர்க்கப்படுகிறது. அன்பாக விளையாடக்கூடியது. கடின உழைப்பாளி. ஆனால் சில நேரம் பிடிவாதத்துடன் இருக்கும். விரைந்து கற்றுக் கொள்ளும்.

அகிட்டா: அதிர்ஷ்டக்காரன்


ஜப்பான், அமெரிக்காவில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட இந்த அகிட்டா இன நாய்களை இரு வகையாக பிரிக்கின்றனர். இதில், ஜப்பானியர்கள் இந்த இன பப்பியை, அதிர்ஷ்டம், ஆரோக்கியத்தின் அடையாளமாக நம்புகின்றனர். அமெரிக்காவில் இது செல்லப்பிராணியாக மட்டுமே வளர்க்கப்படுகிறது. இதற்கு பயிற்சி அளித்தால் தான், சுறுசுறுப்பாக விளையாடும்.

பூடில்: மினியேச்சர் அழகி


மினியேச்சர் வகையில் புத்திசாலியான அழகான நாய். பிரான்சில் அதிகம் இருந்தாலும் ஜெர்மனியில் வாத்து வேட்டையில் பயன்படுத்தப்பட்டது. இவற்றின் அழகு கண்காட்சியில் காண்போரை வசீகரிக்கிறது. விளையாட்டு மற்றும் சாகச பழக்கம் கொண்டது. குழந்தைகளுடன் நன்றாக பழகும். தினமும் சீர்படுத்துதல் தேவைப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us