Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/பூனைகளின் தோழன்!

பூனைகளின் தோழன்!

பூனைகளின் தோழன்!

பூனைகளின் தோழன்!

ADDED : ஜூன் 22, 2025 11:18 AM


Google News
Latest Tamil News
''தவிர்க்க முடியாத சூழலில், ஆசையாக வளர்த்த பூனையை பிரிய நேரும் போது, அதை தத்தெடுத்து, வேறு புகலிடம், ஏற்படுத்தி தருவதில் கிடைக்கும் ஆத்மதிருப்தியை, வார்த்தைகளால் விளக்க முடியாது,'' என்கிறார், கும்பகோணத்தை சேர்ந்த முகமது தமீம்.

பி.சி.ஏ., பட்டதாரியான இவர், ப்ரீடரும் கூட. பெர்ஷியன், பெங்கால் இன பூனைகளை இனப்பெருக்கம் செய்து விற்கிறார். பூனையை தத்தெடுத்து வேறு புகலிடம் அமைத்து தருவது குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

பூனை மிகவும் சென்சிட்டிவ்வான விலங்கு. பெரும்பாலும் வெளிநாட்டு இன பூனைகளையே பலரும் விரும்பி வளர்க்கின்றனர். இவை வீட்டுக்குள் மட்டுமே உலாவுவதால், வெளியில் சென்றுவிட்டால், அச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்து கொண்டு வாழ முடியாமல் சிரமப்படும். இதனால், குழந்தை மாதிரி பார்த்து கொள்பவர்களே அதிகம்.

பூனை வளர்ப்பு குறித்த புரிதல் இல்லாமல் ஆசைக்காக அதை வாங்கி, பின்னாளில் வளர்க்க முடியாத பட்சத்தில், சிலர் தெருவில் விட்டு செல்வதை பார்த்த போது மனம் வேதனைப்பட்டது. அவற்றை எடுத்து வந்தாலும் ஓரிரு நாட்களிலே கண் முன்னே இறப்பதை பார்க்க முடியவில்லை. இதனால், தவிர்க்க முடியாத சூழலில் பூனையை பிரிய நேரும் பட்சத்தில், அதை தத்தெடுத்து வேறு புகலிடம் அமைத்து தர முடிவெடுத்தேன். மருத்துவ காரணங்கள், வெளிநாட்டுக்கு இடம்பெயர்தல், பராமரிக்க ஆளில்லாத சூழல் உள்ளிட்ட சில காரணங்களால், பூனையை பார்த்து கொள்ள முடியாதவர்களிடம் இருந்து, இதுவரை 50 பூனைகள் தத்தெடுத்துள்ளேன். இவற்றை வளர்க்க ஆசைப்படுவோருக்கு, போக்குவரத்து செலவினத்தை மட்டும் ஏற்று கொள்ளுமாறு கூறி இலவசமாக கொடுத்துவிடுவேன்.

பூனையை கொடுக்கும்போது, 'எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதை வீடியோ கால் வழியாக ஆய்வு செய்வேன்; முறையாக பராமரிக்காவிட்டால், திரும்ப எடுத்து சென்று விடுவேன்' என, கூறிவிடுவேன். அப்பூனையின் புதிய முகவரி, உரிமையாளர் தொடர்பு எண்ணை, அதன் பழைய உரிமையாளரிடம் கொடுத்துவிடுவேன். இதுவரை, என்னிடம் பூனை பெற்று சென்றவர்கள், திருப்பி கொடுத்ததில்லை.

நாட்டு இன பூனைகள், தெருக்களில் தங்கி கொள்ளும். வெளிநாட்டு இன பூனைகளால் தான், புதிய சூழலை ஏற்று கொள்ள முடியாது. இதனால் தத்தெடுக்க ஆட்கள் முன்வராத பட்சத்தில், என் வீட்டிலே தங்க வைத்து கொள்வேன். தமிழகம் முழுக்க, பூனை ஆர்வலர்களுடன் தொடர்பு இருப்பதால், செல்லப்பிராணியை தத்து கொடுத்த பிறகு, அவ்வப்போது கள ஆய்வு செய்வதும் வழக்கம். இத்தனை கட்ட பரிசோதனைகளுக்கு காரணம், புதிய இடத்தில், பூனையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்பதே. இதில் ஓர் ஆத்மதிருப்தியை உணர்கிறேன், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us