நினைவு கோப்பையில் அன்பின் ரசம் காலம் கடந்தாலும் பருக பரவசம்!
நினைவு கோப்பையில் அன்பின் ரசம் காலம் கடந்தாலும் பருக பரவசம்!
நினைவு கோப்பையில் அன்பின் ரசம் காலம் கடந்தாலும் பருக பரவசம்!
ADDED : ஜூன் 07, 2025 09:04 AM

''குடும்ப புகைப்படங்களில், செல்லப்பிராணிக்கும் தனி நாற்காலி உண்டு. பின்னாளில், அவை மறைந்தாலும், நினைவுகளோடு கதை பேச வைக்கும் ஆற்றல் இப்புகைப்படங்களுக்கு மட்டுமே இருக்கிறது,'' என்கிறார், கோவையை சேர்ந்த, புகைப்பட கலைஞர் சந்திரசேகர்.
செல்லப்பிராணிகளை புகைப்படம் எடுக்கும் போது சந்திக்கும் சவால்கள் பற்றி, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
செல்லப்பிராணிகளை புகைப்படம் எடுப்பது சற்று கடினமான வேலை தான். ஒரு சிங்கிள் கிளிக் செய்யவே, 45 நிமிடங்கள் வரை செலவிட வேண்டியிருக்கும். வெளியிடங்களுக்கு சென்று நாங்கள் புகைப்படம் எடுப்பதில்லை. ஸ்டுடியோவுக்குள் வைத்து மட்டுமே எடுக்கிறோம். இங்கே செல்லப்பிராணிகளுடன் வருவோர், தயாராவதற்கு பிரத்யேக அறை ஒதுக்கப்படுகிறது. அவற்றிற்கு உணவு அளித்து, தயார்ப்படுத்திய பிறகே, புகைப்படம் எடுக்க முடியும்.
சில நேரங்களில் அவை ஒத்துழைக்காத பட்சத்தில், வேறொரு நாள் அதை திட்டமிடுவோம். குழந்தைகளையும், செல்லப்பிராணிகளையும் அவ்வளவு எளிதில், கவனத்தை திசை திருப்பி, 'போஸ்' கொடுக்க வைக்க முடியாது. சில நேரங்கள் அவை இயல்பாக செய்யும் சேட்டைகளை, புகைப்படம் எடுத்து தருமாறு கேட்பவர்களும் உண்டு.
குடும்பத்துடன் புகைப்படம் எடுக்கும் போது, முன்கூட்டியே அவர்கள் அணியும் உடையின் நிறம், செல்லப்பிராணியின் இனம், அதன் நிறம் ஆகியவற்றை கேட்டறிந்து கொள்வோம். அதற்கேற்ப, புகைப்படத்திற்கான பின்புறம் எப்படி இருக்க வேண்டுமென முடிவு செய்வோம். அழகான முகபாவனையுடன் ஒரு பிரேமிற்குள் அதை புகைப்படம் எடுத்துவிட்டால், வாடிக்கையாளர்கள் முகத்தில் ஏற்படும் நெகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
பெரும்பாலானோர் குடும்ப புகைப்படங்கள் எடுக்க வரும் போது, செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வருகின்றனர். அவர்களின் நடுவே, அவற்றிற்கும் தனி நாற்காலி போடப்படுவதுண்டு. தங்கள் குடும்பத்தில் செல்லப்பிராணியும் ஓர் அங்கமே என்பதற்கான அடையாளமாக இதை கருதுகின்றனர். செல்லப்பிராணியின் ஒவ்வொரு வயதில் ஏற்படும் வளர்ச்சியை நினைவுகளாக்கி கொள்வதற்காக, புகைப்படம் எடுக்க வருவோரும் உண்டு. இப்படி எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்தின் பின்னணியிலும் நடந்த சம்பவங்கள் மறக்க முடியாதவை, என்றார்.