Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ ஹேர் விஷயத்தில் 'கேர்புல்'; வண்ண சாயத்தால் பாதிப்பு?

ஹேர் விஷயத்தில் 'கேர்புல்'; வண்ண சாயத்தால் பாதிப்பு?

ஹேர் விஷயத்தில் 'கேர்புல்'; வண்ண சாயத்தால் பாதிப்பு?

ஹேர் விஷயத்தில் 'கேர்புல்'; வண்ண சாயத்தால் பாதிப்பு?

ADDED : ஜூன் 13, 2025 10:23 PM


Google News
Latest Tamil News
''அதிக உடல் சூடு, வியர்வை தொந்தரவுக்காக, வெயில் காலத்தில் குட்டீஸ்களுக்கு, 'மொட்டை' போடுவது வழக்கம். இதையே, உங்கள் செல்லப்பிராணிகளுக்கும் பின்பற்ற கூடாது. முடியை முற்றிலுமாக அப்புறப்படுத்தும் ஜீரோ கட் குருமிங், செல்லப்பிராணிகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு தடையாக அமையலாம்,'' என்கிறார், கோவையை சேர்ந்த, நிக்கிஸ் பா ஸ்டைல் மேலாளர் சாஹில்.

செல்லப்பிராணிகளுக்கான சம்மர் குரூமிங் பற்றி நம்மிடம் பகிர்ந்தவை:


நாய் வளர்க்கும் பலரும், கோடை காலத்தில் முடியை முற்றிலும் அகற்றும், 'ஜீரோ கட் குரூமிங்' செய்யவே விரும்புகின்றனர். ஆனால், அது பப்பியின் உடல்நலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில், முடி முற்றிலும் நீக்கும் போது, தோல் நேரடியாக தரையில்படும். இதோடு கண்ட இடத்தில் துாங்குவதால் நோய் தொற்று பரவலாம். மேலும், அதிக வெப்பம் உடலுக்குள் நேரடியாக செல்வதை தடுக்க, குறைந்தபட்சம் ஒரு இஞ்ச் அளவு முடி இருப்பது அவசியம்.

பொதுவாக வெயில் காலத்தில், அதிக உடல் வெப்பத்தை சமப்படுத்த, தண்ணீர் தேங்கிய இடங்களில் தான், நாய், பூனை உறங்கும். நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதால், அவைகளின் முடியில், முடிச்சு விழலாம். அதை, தினசரி சீவிவிடாமல், அலட்சியம் காட்டினால், செல்லப்பிராணிகளின் உடல் முழுக்க, முடியில் முடிச்சு உருவாகிவிடும். இதனால், உடலுக்குள் இருக்கும் வெப்பம் வெளியேறாது. தோலில் அலர்ஜி ஏற்படலாம். இச்சமயத்தில், வேறு வழியில்லாமல், அம்முடிகளை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இப்படி முற்றிலும் முடி அப்புறப்படுத்தும் போது, செல்லப்பிராணியின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவை மீண்டும் தண்ணீர் தேங்கிய இடத்தில் உறங்காமல் பார்த்து கொள்வது, அதன் இருப்பிடத்தை சுத்தப்படுத்துவது, தோலில் அலர்ஜி ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியம்.

 பப்பிக்கு பாதம், வாலின் பின்புறம், அடி வயிறு பகுதியில், அதிகமாக வளரும் முடியை அவ்வப்போது வெட்டி விட வேண்டும்.

 வெயில் காலத்தில் பூனைகளுக்கு அதிக முடி உதிர்வதாக பலரும் கருதுகின்றனர். ஆனால், எல்லா தட்பவெப்ப மாறுதலிலும், பூனைக்கு முடி உதிர்வு இருக்கும். இதற்காக, ஜீரோ டிரிம் செய்தால், பூனை பெரிதும் அவதிப்படும்.

 பூனையை பொறுத்தவரை, அதன் கழிவுகளை வெளியேற்றும் பகுதி, காது, அடி வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வளரும் முடியை வெட்டிவிட வேண்டும். தினசரி உடல் முழுவதும் உள்ள முடியை சீவிவிட வேண்டும்.

 சிலர், முடிக்கு விதவிதமான வண்ணங்களில் சாயம் பூச விரும்புகின்றனர். அது, உங்கள் செல்லப்பிராணிக்கு ஏற்றதா, ஏதேனும் அலர்ஜி வர வாய்ப்புள்ளதா என்பதை பரிசோதிப்பது அவசியம். அனுபவமுள்ள குரூமர், கால்நடை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், முடிக்கு சாயம் பூசினால், உங்கள் செல்லத்திற்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம்

 வெயில் காலத்திற்கு ஏற்ப செல்லப்பிராணிகளின்உணவுமுறைகளை மாற்ற வேண்டும். ஈரப்பதமுள்ள உணவுகளை கொடுக்கலாம். பப்பியாக இருந்தால், வாரத்திற்கு இருநாள் ஐஸ்கிரீம், மோர், பழங்கள், தயிர் சாதம் கொடுப்பது நல்லது. பூனை அடிக்கடி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 சத்தான உணவு, பராமரிப்பில் கவனம் செலுத்தினாலே, செல்லப்பிராணிகள் அதன் ஆயுட்காலம் முழுக்க ஆரோக்கியமாக வாழும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us