/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பாசி நிதி நிறுவன இயக்குனர் வீட்டில் 2ம் நாளாக சோதனைபாசி நிதி நிறுவன இயக்குனர் வீட்டில் 2ம் நாளாக சோதனை
பாசி நிதி நிறுவன இயக்குனர் வீட்டில் 2ம் நாளாக சோதனை
பாசி நிதி நிறுவன இயக்குனர் வீட்டில் 2ம் நாளாக சோதனை
பாசி நிதி நிறுவன இயக்குனர் வீட்டில் 2ம் நாளாக சோதனை
ADDED : ஆக 19, 2011 01:52 AM
திருப்பூர்:திருப்பூரில் உள்ள பாசி நிதி நிறுவன இயக்குனர் வீட்டில், இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், கட்டுக்கட்டாய் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள, பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பாப்பா நகரில் உள்ள மோகன்ராஜ் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.இரண்டாவது நாளாக நேற்றும், கோவையில் இருந்து டாடா சுமோ காரில் மோகன்ராஜை திருப்பூருக்கு அழைத்து வந்தனர்; காலை 11.00 மணியளவில், ஆறு அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ., குழு சோதனையில் ஈடுபட்டது; கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டது.
இரு குழுக்களாக அதிகாரிகள் பிரிந்து, வீட்டை ஆராய்ந்தனர். அதன் பின், வீட்டுக்கு எதிரில் உள்ள மோகன்ராஜூக்கு சொந்தமான கட்டடத்தை நேற்று சோதனையிட்டனர். முதலீட்டாளர்கள் தரப்பில் பணம் செலுத்தியதற்கான ரசீது, நோட்டுகள் மற்றும் ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன; கட்டுக்கட்டாய் இருந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். கட்டடத்தின் மேல்பகுதியில், மோகன்ராஜ் வீட்டை கண்காணிக்கும் கோணத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா குறித்தும் விசாரித்தனர்.நிதி நிறுவனம் துவக்கிய சில மாதங்களில், பல கோடி ரூபாய் முதலீடு ஆன நிலையில், வீட்டுக்கு வந்து செல்பவர்களை கண்காணிக்க, முன்னெச்சரிக்கை பாதுகாப்புக்காக கேமரா பொருத்தியதாக மோகன்ராஜ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மோகன்ராஜிடம் விசாரித்தனர். மோகன்ராஜின் தாயார் பொன்னம்மாளிடமும் விசாரித்தனர். பல முக்கிய ஆதாரங்களும், ஆவணங்களும் சிக்கியுள்ளன; பாசி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் துவங்கிய விதம், செயல்பாடு; கோடிக்கணக்கில் பணம் முதலீடு; வெளிநாடுகளில் ஏற்படுத்திய வர்த்தக தொடர்பு, பண பரிமாற்றம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது; வழக்கு குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் மோகன்ராஜிடம் இருந்து சி.பி.ஐ., அதிகாரிகள் விளக்கமாக பதில் பெற்றுள்ளனர்.


