/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஏனாம் ஊழல் பின்னணி குறித்து விசாரணைஏனாம் ஊழல் பின்னணி குறித்து விசாரணை
ஏனாம் ஊழல் பின்னணி குறித்து விசாரணை
ஏனாம் ஊழல் பின்னணி குறித்து விசாரணை
ஏனாம் ஊழல் பின்னணி குறித்து விசாரணை
ADDED : ஆக 11, 2011 02:42 AM
புதுச்சேரி:'பட்ஜெட் கூட்டத் தொடரை, குறைந்தது 20 நாட்களாவது நடத்த வேண்டும்' என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.
அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பொதுப் பணித் துறை மூலம் ஏனாமில் பணி முடிந்து, திறப்பு விழா நடத்திய பிறகு, டெண்டர் விட்டனர். இதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியும் ஏற்கனவே இருந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இதுதொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி, அவர்களது பரிந்துரை அடிப்படையில் செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெறும் அம்புகள்தான். அதிகாரிகள் மட்டத்துடன் மட்டுமல்லாமல், பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். ஏனாமில் நடந்த 10 கோடி ரூபாய்க்கு மேலான பணிகள், டெண்டர்கள் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் 150க்கும் மேற்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிதாக 135 பேரை வேலைக்கு முதல்வர் வைத்துள்ளார். 'மல்டி பர்ப்பஸ் வொர்க்கர்ஸ் சொசைட்டி' என்ற பெயரில் 2 வாரத்துக்கு முன் ஒரு சங்கத்தை முதல்வருக்கு வேண்டியவர் பதிவு செய்துள்ளார்.
இதன்மூலம் ஒரே நாளில் கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிகளைச் சேர்ந்த 135 பேரை வேலைக்கு வைத்துள்ளனர். இது, எந்த விதத்தில் நியாயம்? முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும், தேர்தலுக்குப் பிறகு 12 பேரை சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் வேலைக்கு வைத்துள்ளார். அவர் செய்த உதவிக்கு கைமாறாக வேலைக்கு வைத்துள்ளனர். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் 22 நாட்கள், 23 நாட்கள் நடப்பது வழக்கம். ஆனால், சட்டசபை செயலகத்தில், 5 நாட்களுக்கு மட்டுமே கேள்விகளைப் பெற்றுள்ளனர். குறைந்தது 20 நாட்களாவது நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளிக்க உள்ளோம்.சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுவை சபாநாயகர் உடனடியாக கூட்டி, சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.