/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சாலையின் நடுவே ஆழ்துளை கிணறு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்சாலையின் நடுவே ஆழ்துளை கிணறு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையின் நடுவே ஆழ்துளை கிணறு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையின் நடுவே ஆழ்துளை கிணறு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையின் நடுவே ஆழ்துளை கிணறு விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அருகே, சாலையின் நடுவே ஆழ்துளை கிணறு பைப் லைன் ஐந்தடி உயரத்தில் அமைந்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.பள்ளிப்பட்டு அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து கோணசமுத்திரம் வழியாக பொதட்டூர்பேட்டைக்கு செல்லும் சாலை உள்ளது.
இது சாலை அகலப்படுத்தும்போது, அப்புறப்படுத்தாமல் அப்படியே தார்ச்சாலை போடப்பட்டது. இதனால், சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், திடீரென சாலையின் நடுவே அமைந்துள்ள ஆழ்துளை கிணறு பைப் லைனை பார்த்து, நிலைகுலைந்து அச்சத்துடன் செல்கின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் சாலையின் நடுவே திடீரென தோன்றும் பைப் லைனை பார்த்து, அதிர்ச்சிக்குள்ளாகி விபத்து ஏற்படும் அபாயத்துடன் வாகனத்தை திருப்பி கடந்து செல்கின்றனர்.இதேபோல, கொத்தகுப்பம் சுடுகாட்டை அடுத்த சாலை வளைவில் அமைந்துள்ள, விவசாய கிணற்றின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து தார்ச்சாலையின் அடியில், சுரங்கம் போல் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.அவ்வழியாக செல்லும் வாகனங்கள், பள்ளத்தில் விழுந்து விடாமல் இருக்க நெடுஞ்சாலை துறை சார்பாக, சாலையில் விபத்து எச்சரிக்கை தூண்கள் வைக்கப்பட்டுள்ளது.
தூண்கள் அமைக்கப்பட்டு, பல மாதங்களாகியும் சாலையின் அடியின் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலை வளைவில் வாகனங்கள் திரும்பும் போது இந்த தூண்களில் மோதி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர்(பள்ளிப்பட்டு) சுகுமாரனிடம் கேட்டபோது, ''அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து கோணசமுத்திரம் வழியாக, பொதட்டூர்பேட்டைக்கு செல்லும் சாலையில் அத்திமாஞ்சேரிபேட்டை ஏரிக்கரையில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் பைப் லைனை அகற்ற, ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், விவசாய கிணற்று சுற்றுச்சுவர் சரிவினால் தார்ச்சாலையின் அடியில் சரிந்து போய் உள்ள பள்ளத்தை, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரி செய்ய அரசு உத்தரவு பெற திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவு பெற்ற பிறகு பணிகள் துவங்கும்,'' என்றார்.இதுகுறித்து, கொடிவலசா ஊராட்சி தலைவர் கோதண்டராமன் கூறும் போது, ''சாலை நடுவே இருக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து பூமிக்கடியில் எல் பென்ட் பொருத்தி, சாலையோரமாக குழாய்கள் பதித்து குடிநீர் சப்ளை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு தற்போதுள்ள ஆழ்துளை கிணற்றின் மீது சாலை அமைக்கப்படும்,'' என்றார்.
எம்.டி.கணபதி


