PUBLISHED ON : ஆக 12, 2011 12:00 AM
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி: விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்களின் விலைகள் அதிகரித்து விட்டன. உரத்தட்டுப்பாடு உள் ளது; உர விலையும் அதிகரித்து விட்டது. டீசல், பெட்ரோல் விலை அதிகரிப்பால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேச்சு: பெரும்பாலான வெளிநாடுகளில் போக்குவரத்து சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. நம் நாட்டிலும் அதே போல், கடுமையாக கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முதல்வரின் வாகனம் மீறினால் கூட, போலீசார் நிறுத்தி, அபராதம் வசூலிக்க வேண்டும். ஆனால், எந்த காரணம் கொண்டும், நான் போக்குவரத்து விதிமுறைகளை மீற மாட்டேன்.
மா.கம்யூ., மூத்த தலைவர் பிருந்தா கராத் பேட்டி: ஊழல், விலைவாசி உயர்வு போன்றவற்றால், மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைகள் குறித்து, பார்லிமென்டில் நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால், இவற்றை எழுப்ப முடியாமல், பா.ஜ.,வினர் அவையை முடக்கி வருகின்றனர். பார்லிமென்ட் முடங்குவதால், காங்கிரசுக்குத்தான் பலன் கிடைக்கிறது. அதனால், பார்லிமென்ட்டை முடக்க பா.ஜ., வும், காங்கிரசும் கைகோர்த்து கூட்டாக சதி செய்கின்றன.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை: சமச்சீர் கல்விக்காக தயாரிக்கப்பட்ட பாடநூல்களில் உள்ள நாத்திக, முன் ஆட்சியாளர்களின் சுயபுராணங்கள், தேசவிரோத, சமூக விரோதக் கருத்துகளை நீக்கிவிடவும் என, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இதை, தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். பகுத்தறிவு எனும் பெயரில், திட்டமிட்டு புகுத்திய இந்து விரோதக் கருத்துகளையும் நீக்கிவிட வேண்டும்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேச்சு: பயங்கரவாத தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது. அது எந்த வகையில், எந்த வடிவில் வந்தாலும், ஒடுக்க அரசு உறுதியுடன் உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி: நான் ராஜினாமா செய்திருந்தாலும், புதிய தலைவரை நியமிக்கும் வரை நான் தான் தலைவர். அதனால், கட்சியின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் எதிராக செயல்படும் சமூக விரோதிகளையும், தான் தோன்றித்தனமாக செயல்படுபவர்களையும் நீக்க எனக்கு அதிகாரம் உண்டு.