PUBLISHED ON : செப் 14, 2011 12:00 AM

அமைச்சர்களுக்கு மம்தா 'தடா!'
'ஏன் தான் திரிணமுல் கட்சியில் சேர்ந்தோமோ' என, விரக்தியில் இருக்கின்றனர் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங், தலைவருமான மம்தா பானர்ஜி, எடுத்ததற்கெல்லாம் சாட்டையை சுழற்றுவது தான் இதற்கு காரணம்.மேற்கு வங்க மக்களுக்கு, கால்பந்து விளையாட்டு மீது, அதீத ஆர்வம். அதிலும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற வீரர்கள், கோல்கட்டாவுக்கு வந்து, கால்பந்து போட்டியில் விளையாடினால், அந்த போட்டியை, என்ன விலை கொடுத்தாவது, பார்த்து விடுவர். அரசியல்வாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல.உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர்கள் பீலி, மாரடோனா போன்றோர், இதற்கு முன், கோல்கட்டாவில் வந்து விளையாடியபோது, அமைச்சர்களாக இருந்தவர்களும், மூத்த அரசியல்வாதிகளும், முதல் வரிசையில் போய் அமர்ந்து, போட்டியை ரசித்தனர்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல வீரர் மெஸ்சி, சமீபத்தில் கோல்கட்டாவுக்கு வந்தபோதும், மேற்கு வங்க மாநிலம், வழக்கம் போல் களை கட்டியது. மம்தா அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் தான், முதலில் டிக்கெட், 'புக்' செய்தனர்.
ஆனால், இவர்களின் ஆசைக்கு உலை வைத்தார் மம்தா. 'அமைச்சர்கள் யாரும் கால்பந்து போட்டியை பார்க்க, அரங்கிற்கு செல்லக் கூடாது' என, 'தடா' போட்டார். விரக்தி அடைந்த அமைச்சர்கள், 'சரி, 'டிவி'யிலாவது போட்டியை ரசிப்போம்' என, தங்களுக்குள் ஆறுதல் கூறிக் கொண்டனர். அதற்கும் தடை விதித்தார் மம்தா.போட்டி நடக்கும் நேரத்தில், தலைமைச் செயலகத்தில், அமைச்சரவையின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இதனால், அமைச்சர்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டனர்.