Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நிலத்தடி நீர் மாசுபட்டதால் தாகத்தில் குள்ளம்பாளையம்

நிலத்தடி நீர் மாசுபட்டதால் தாகத்தில் குள்ளம்பாளையம்

நிலத்தடி நீர் மாசுபட்டதால் தாகத்தில் குள்ளம்பாளையம்

நிலத்தடி நீர் மாசுபட்டதால் தாகத்தில் குள்ளம்பாளையம்

ADDED : ஆக 17, 2011 02:49 AM


Google News
பெருந்துறை: நிலத்தடி நீர் மாசுபட்டதாலும், போதுமானளவு காவிரி குடிநீர் கிடைக்காததாலும், குள்ளம்பாளையம் கிராம பஞ்சாயத்து மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கின்றனர்.

பெருந்துறை யூனியன் குள்ளம்பாளையம் கிராம பஞ்சாயத்து மக்கள் தொகை 1,800. மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க பஞ்சாயத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மூன்று தொட்டிகள், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள நான்கு தொட்டிகள் கட்டப்பட்டன. புதிய திருப்பூர் குடிநீர் திட்டத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, 40 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த குடிநீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி, மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசுகையில், 'தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம், அனைவருக்கும் குடிநீர் வசதி முக்கியமாக கொள்ளப்படும்' என, கூறியுள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, சட்டசபையில், 'கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

குள்ளம்பாளையம் பஞ்சாயத்தைச் சேர்ந்த தங்கவேல் கூறுகையில், குள்ளம்பாளையம் பஞ்சாயத்தில் மக்கள் தொகை 1,800. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் தண்ணீர் என்று வைத்துக் கொண்டால், பஞ்சாயத்திற்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் புதிய திருப்பூர் குடி திட்டத்திலிருந்து இரண்டு நாளுக்கு ஒரு முறை 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. சில சமயத்தில் அந்த தண்ணீரும் சரியாக வழங்கப்படுவதில்லை.

மீதி தண்ணீர் தேவையை சமாளிக்க ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்குவதில் சிக்கல் உள்ளது. அதற்கு காரணம், பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகளிலுள்ள தண்ணீர் மாசுபட்டு விட்டது. அவற்றை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

தமிழக முதல்வரும், உள்ளாட்சி துறை அமைச்சரும் சட்டசபையில் கூறியதைப் போல், கிராமபுறத்தைச் சேர்ந்த தனி நபருக்கு நாள் ஒன்று 40 லிட்டர் தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குள்ளம்பாளையம் பஞ்சாயத்தில் மட்டுமின்றி, பெருந்துறை 'சிப்காட்' வளாகத்தை சுற்றியுள்ள பெரும்பாலான பஞ்சாயத்துகளிலும் இதே நிலை நீடிக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us