வெளிநாட்டு நன்கொடை பெறும் என்.ஜி.ஓ.,க்களுக்கு அரசு கிடுக்கிப்பிடி
வெளிநாட்டு நன்கொடை பெறும் என்.ஜி.ஓ.,க்களுக்கு அரசு கிடுக்கிப்பிடி
வெளிநாட்டு நன்கொடை பெறும் என்.ஜி.ஓ.,க்களுக்கு அரசு கிடுக்கிப்பிடி
ADDED : மே 28, 2025 03:51 AM

புதுடில்லி : பதிப்பகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நன்கொடை பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செய்தி மடல்களை வெளியிட முடியாது என்றும், செய்தி உள்ளடக்கங்கள் எதையும் வெளியிடவில்லை என, இந்திய செய்தித்தாள் பதிவாளரிடம் இருந்து சான்று பெற வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு
வெளிநாட்டு நன்கொடைகள் பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் மிக கடுமையான சட்ட திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. இதில், பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெளிநாட்டு நன்கொடைகளை பெற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பயங்கரவாத நிதி மற்றும் பண மோசடிக்கான உலகளாவிய கண்காணிப்பு அமைப்பான எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் ஒழுங்கு நடைமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றுவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.
பதிவு செய்ய விரும்பும் அத்தகைய அமைப்புகள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சொத்துக்கள் மற்றும் கடன் அறிக்கை, ரசீதுகள், வருமானம் மற்றும் செலவு கணக்கு உள்ளிட்ட கடந்த மூன்று நிதியாண்டுகளின் நிதி அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை இணைக்க வேண்டும்.
நடவடிக்கை
பதிப்பகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நன்கொடை பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்தி மடல்களை வெளியிட முடியாது.
அதே போல, சங்கம் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளியீடு, இந்திய செய்தித்தாள் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அவர்களது உள்ளடக்கம் செய்தி சார்ந்தது அல்ல என, இந்திய செய்தித்தாள் பதிவாளரிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாட்டு நிதியை பெறும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், அத்தகைய நிதியை, பெறப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் அனுமதி அல்லது பதிவு பெறாமல் எந்தவொரு வெளிநாட்டு நன்கொடைகளையும், அமைப்புகள் பெறவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.