Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/லேட்டாக வரும் அரசு ஊழியர்களுக்கு...கிடுக்கிப்பிடி

லேட்டாக வரும் அரசு ஊழியர்களுக்கு...கிடுக்கிப்பிடி

லேட்டாக வரும் அரசு ஊழியர்களுக்கு...கிடுக்கிப்பிடி

லேட்டாக வரும் அரசு ஊழியர்களுக்கு...கிடுக்கிப்பிடி

ADDED : செப் 01, 2011 01:28 AM


Google News

அலுவலகத்துக்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் தினமும் காலதாமதமாக அலுவலகத்துக்கு வருவதாகவும், அலுவலக நேரத்தில் சொந்த வேலையாக வெளியே சென்று விடுவதாகவும் மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

வேலை நேரத்தில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் காற்று வாங்குவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தலைமைச் செயலகத்துக்குப் புகார்கள் சென்றது. இதையடுத்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலர் சத்தியவதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி காலதாமதமாக வருவது, வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் வெளியே செல்வது போன்றவற்றில் ஈடுபடும் ஊழியர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறும் தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்ற சோதனைகளை மாதத்துக்கு இரு முறை நடத்துமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அனைத்துத் துறைகளின் செயலர்கள், சிறப்பு செயலர்கள், துறை மற்றும் அலுவலகங்களில் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், நிர்வாக சீர்த்திருத்தப் பிரிவும், அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர் காலதாமதமாக வருகின்றனர் எனவும், அலுவலக நேரத்தில் தங்களது இருக்கையில் இருப்பதில்லை; சொந்த வேலையாக வெளியில் சென்று விடுகின்றனர் எனவும் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, நடத்தை விதிகளை மீறும் செயலாகும். அரசு ஊழியர்கள் காலதாமதமாக வருவதாக இருந்தால் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். சரியான காரணம் தெரிவிக்காவிட்டால் அனுமதி தரப்படாது. மாதத்துக்கு அதிகபட்சம் இருமுறை, ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் தாமதமாக வருவதற்கு சரியான காரணங்கள் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் தலைவர்கள் அனுமதி தரலாம். அனுமதி பெறாமல் காலதாமதமாக வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியரின் கேஷூவல் விடுப்பில் இருந்து அரை நாள் கழிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us