மயக்க ஊசியால் யானை பலியானதில் சர்ச்சை :அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மயக்க ஊசியால் யானை பலியானதில் சர்ச்சை :அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மயக்க ஊசியால் யானை பலியானதில் சர்ச்சை :அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவை : கோவையில், 'ரேடியோ காலரிங்' பொருத்தும் முயற்சியில், ஆண் யானை பலியானதற்குக் காரணமான அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில், பாலமலை பகுதியில் உலவி வந்த ஆண் யானை ஒன்றுக்கு, இதைப் பொருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியடைந்தது. அதன்பின், கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட தடாகம் பகுதியில், செங்கல் சூளை அருகே சில காட்டு யானைகள் உலவுவதாக தகவல் வந்து, அதிலுள்ள ஆண் யானை ஒன்றை வனத்துறையினர் குறி வைத்தனர். இரவு நேரத்தில், அதற்கு மயக்க ஊசியைச் செலுத்தி, 'ரேடியோ காலரிங்' பொருத்த முயன்ற போது, அந்த ஆண் யானை யாரும் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளது. ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக வனத்துறை மேற்கொண்ட முயற்சி, மற்றொரு புதிய பிரச்னையைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே, ஆசிய யானைகளில் ஆண்-பெண் விகிதாச்சாரம் மிகவும் குறைந்து வரும் நிலையில், ஆண் யானை ஒன்றை வனத்துறையே சாகடித்திருப்பது, கானுயிர் ஆர்வலர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. வனத்துறையினரின் அனுபவமின்மை, தவறான முடிவே இந்த யானையின் மரணத்துக்குக் காரணமென்று, பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயக்க ஊசி செலுத்தும்போது, ஆண் யானைக்கும், பெண் யானைக்கும் எந்தெந்த அளவில் மருந்து செலுத்த வேண்டுமென்பதை கால்நடை டாக்டர்கள் துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில், இதில் அனுபவம் வாய்ந்த வனத்துறை அதிகாரிகள் அல்லது கால்நடை டாக்டர்களின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சமாக, இந்த முயற்சியை இரவு நேரத்தில் செய்வதையாவது தவிர்த்திருக்க வேண்டும். நள்ளிரவில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்றதால் தான், அநியாயமாக ஆண் யானை பலியாகியுள்ளதாக கானுயிர் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நடந்த தவறை மூடி மறைக்க, இரவோடு இரவாக அதை புதைத்துள்ளனர் என்பது இவர்களின் கருத்து.
இந்த நடவடிக்கைக்கு இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்தது, மயக்க ஊசியைச் செலுத்திய பின்னும், ஆண் யானை அரை கி.மீ., தூரம் கடந்து நிலை குலையுமளவுக்கு சரியான அளவில் மருந்தைச் செலுத்தாதது என, கோவை வனத்துறை கால்நடை டாக்டரின் மீதே, இவர்களின் கோபக்கணைகள் பாய்கின்றன. யானையின் மரணத்துக்குக் காரணமானவராகக் கருதப்படும் கால்நடை டாக்டரையே, பிரேத பரிசோதனை செய்ய வைத்துள்ளதும், இவர்களின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. எனவே, இரவோடு இரவாக புதைத்த அந்த ஆண் யானையை, வேறு கால்நடை டாக்டரை கொண்டு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென்று, பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜலாலுதீன் கூறுகையில், 'கடந்த 1991ம் ஆண்டிலேயே முதுமலையில் ரேடியோ காலரி பொருத்துவதை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். அதிநவீனமாகி விட்ட இந்த காலகட்டத்தில், மயக்க ஊசி (டிராங்குலைஸ்) செலுத்தும்போது, ஓர் ஆண் யானை இறந்திருப்பதாகக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது' என்றார்.
''ரேடியோ காலரிங் கருவி பொருத்துவதால், யானை - மனித மோதலையோ, யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதையோ தடுக்க முடியாது,'' என, 'ஜி.பி.எஸ்., ரேடியோ காலரிங்' ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிபுணர் கூறினார்.
சென்னை 'கேர் - எர்த்' மையத்தின், வனம் மற்றும் விலங்கியல் ஆராய்ச்சியாளர் அறிவழகன் கூறியதாவது: யானை - மனித மோதல்களை குறைக்கவும், கட்டுப்படுத்தவும், 'ஜி.பி.எஸ்.,ரேடியோ காலரிங்' ஆராய்ச்சி, மேற்கு வங்கத்தில் நடந்தது. இதில் ஈடுபட்ட எனது அனுபவத்தின் அடிப்படையில், அறிவியல் ரீதியாக, யானைகளின் நடமாட்டம் குறித்து அறிய மட்டுமே பயன்தரும்; யானை - மனித மோதலை தடுக்க முடியாது. மாறாக, யானைகளுக்கு, மனரீதியான பாதிப்பு ஏற்படும். இதற்கு ஒரே வழி, யானைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ஆராய்ச்சிகள் பயன் தந்திருந்தால், மேற்கு வங்கத்தில், முழு அளவில் செயல்பட்டிருக்கும்; ஆனால், அதை நிறுத்தி விட்டனர். நீலகிரி போன்ற மலை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, வனத்துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, அறிவழகன் கூறினார்.