Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

PUBLISHED ON : ஆக 21, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

கட்சியினரை உதாசீனப்படுத்தும் பெண் அமைச்சர்!



''சட்டசபை கட்சித் தலைவரா இருக்கறவர், சட்டசபை பக்கமே எட்டிப் பார்க்காம இருக்காரு பா...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''காங்கிரஸ் கட்சி விவகாரமாங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.''ரொம்ப சரியா சொன்னீங்க பா...

அந்தக் கட்சிக்கு, சட்டசபையில இருக்கறதே அஞ்சு உறுப்பினர்கள் தான்... அவங்கள்ல, ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ., கோபிநாத்தை, சட்டசபை கட்சித் தலைவரா நியமிச்சிருக்காங்க... இவருக்கு தமிழ் சரியா பேச வராது... கன்னடத்திலும், தமிழிலும் மாறி, மாறி பேசுவார்...



தங்கபாலு ஆதரவாளர்ங்கறதால, சட்டசபை தலைவரா நியமிச்சிட்டாங்க...''ஆனாலும், இவர் பெரும்பாலும், சட்டசபை பக்கமே வர்றது கிடையாது... நாலு பேர் தான் வர்றாங்க... மத்திய அரசையோ, காங்கிரஸ் கட்சியையோ, சட்டசபையில யாராவது விமர்சனம் செஞ்சு பேசினா, அவங்களை சமாளிக்க முடியாம தடுமாறும் நிலை இருக்கு பா...'' என்றார் அன்வர்பாய்.''ரெண்டு மாசமா ஊக்கத்தொகை கொடுக்காததால, ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.



''எந்த துறை தகவல் வே...'' என்று விசாரித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''டாஸ்மாக் கடைகள்ல, சேல்சுக்கு தகுந்த மாதிரி, மாசந்தோறும் ஊக்கத்தொகை கொடுத்துண்டு இருக்கா... ஜூன், ஜூலை மாசத்துக்கு இன்னும் கொடுக்கலையாம்... அதனால, ஊழியர்கள் வருத்தப்பட்டுண்டு இருக்கா... அதோட, 'பணி நிரந்தரம், தகுதியானவர்களுக்கு கல்வித் துறையில ஆசிரியர் வேலைன்னு, எங்களோட பல கோரிக்கைகளை முந்தைய அரசு கண்டுக்கலை... டாஸ்மாக்கை ஆரம்பிச்ச அ.தி.மு.க., அரசாவது, எங்களோட குறைகளை தீர்த்து வைக்கணும்'னு, கேட்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.



''அமைச்Œர் பதவி கிடைச்Œதுல இருந்து, எல்லாரையும் உதாசீனப்படுத்தறாங்களாம்...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.''இப்படியிருந்தா, பதவி ரொம்ப நாளைக்கு நிலைக்காதே பா...'' என்றார் அன்வர்பாய்.''சமூக நலத்துறை அமைச்சரா செல்வி ராமஜெயம் பொறுப்பேத்ததுல இருந்து, கட்சியினரை மதிக்கறது கிடையாதாம்ங்க... மாவட்டத்துல, முக்கிய பொறுப்புகள்ல இருக்கற கட்சி நிர்வாகிகள் போன்ல பேசினா, அமைச்சர் பேசறது கிடையாது... இதனால, உள்ளூர் கட்சிக்காரங்க, அமைச்சர் சந்திப்பை, 'அவாய்ட்' பண்றாங்களாம்...



''சொந்த பந்தங்களுக்கு மட்டும், அமைச்சர் முக்கியத்துவம் கொடுக்கறாராம்ங்க... அதனால, அவங்க பண்ற ஓவர் பந்தா, கட்சியினர் மத்தியில எரிச்சலை ஏற்படுத்தியிருக்குங்க... இந்நிலையில, மகனுக்கும், மருமகனுக்கும், விலை உயர்ந்த ரெண்டு சொகுசு கார்களை அமைச்சர் வாங்கி கொடுத்திருக்கார்... இதையெல்லாம், மேலிடத்துல போட்டுக் கொடுக்க ஒரு குரூப் தயாராயிட்டு இருக்குங்க...'' எனக் கூறிவிட்டு, பெஞ்சில் இருந்து எழுந்தார் அந்தோணிசாமி; பெஞ்சில் அமைதி நிலவியது.



முதல்வர் அறிவிப்பு கோர்ட் அவமதிப்பா...?



''சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மாட்டேங்கறாரேன்னு புலம்புதாங்க வே...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''விஷயத்தை சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''தமிழக போலீசுல, கடந்த 76ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ.,யா, 277 பேர் தேர்வானாங்க வே... அவங்கள்ல இப்ப நூறு பேருக்குள்ள தான் சர்வீசுல இருக்காங்க... இதுல, 22 பேர் இப்ப ஏ.டி.எஸ்.பி.,யா இருக்காங்க...



இன்னும் பத்து மாசத்துக்குள்ள, 'ரிடையர்' ஆகப் போற இவங்க, எப்படியாவது எஸ்.பி.,யாகணும்னு முயற்சி எடுத்தாங்க வே...''இதுக்கு, அரசு தரப்பில இருந்தும் அனுமதி கிடைச்சிட்டு... ஆனா, உயர் அதிகாரிகள் இவங்க புரமோஷனை நிறுத்தி வச்சிருக்காவ... சாமி வரம் கொடுத்தும் பூசாரி கொடுக்காததால, மீண்டும் முதல்வர் மனசு வச்சு, எஸ்.பி.,யா புரமோஷன் வழங்கணும்ன்னு கோரிக்கை வச்சுருக்காங்க வே...'' என்றார் அண்ணாச்சி.



''துணைவேந்தர்களின் பதவிக்கு ஆபத்து வந்திருக்கு பா...'' என, அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''என்ன ஆச்சுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து, சில துணை வேந்தர்களை மாற்ற ஆளுங்கட்சி முடிவு செஞ்சிருக்கு பா... திருவள்ளுவர் பல்கலையில ரெண்டு வருஷமா, தேர்வுத்தாள் திருத்தும் பணியில் முறைகேடுன்னு உயர்கல்வித் துறைக்கு புகார் போயிருக்கு...



இதுகுறித்து, விசாரணை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செஞ்சிருக்கு...''இந்த பல்கலையின் துணைவேந்தரை பதவி விலகச் சொல்லி, துறையில் இருந்து, 'பிரஷர்' கொடுத்திருக்காங்க பா... ஏற்கனவே இவர் கல்லூரிக் கல்வி இயக்குனரா இருந்தப்ப, கல்லூரி முதல்வர் நியமனத்துல, பல்கலைக் கழக அனுமதி இல்லாம சிபாரிசு செஞ்சதாவும் ஒரு புகார் வந்துச்சு... இது குறித்தும் விசாரிக்கறாங்க... கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமா இருந்த பல துணைவேந்தர்களும், இப்ப சிக்கல்ல இருக்காங்க...'' என்றார் அன்வர்பாய்.''கோர்ட்ல கேஸ் இருக்கறப்ப, அரசு எப்படி இந்த அறிவிப்பை வெளியிடலாம்னு எதிர்தரப்பு கேள்வி எழுப்பிருக்கு ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு தாவினார் குப்பண்ணா.



''அப்படி என்ன அறிவிப்பை வெளியிட்டுட்டாங்க...'' என்றார் அன்வர்பாய்.''புதிய தலைமைச் செயலக வளாகத்தை மருத்துவமனையா மாத்தப் போறதா, சட்டசபையில முதல்வர் அறிவிச்சாங்க ஓய்... நீதிபதி தங்கராஜ் கமிஷனை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்ல நிலுவையில இருக்கு... இந்த சமயத்துல, 'எப்படி இந்த அறிவிப்பை வெளியிடலாம்... இது, கோர்ட் அவமதிப்பு'ன்னு எதிர்தரப்புல சொல்றா..'' என்றார் குப்பண்ணா.''ஆளுங்கட்சியில என்ன சொல்றாங்க...'' என்றார் அன்வர்பாய்.''அந்த வழக்கு, விசாரணை கமிஷனை எதிர்த்து தான்... அதுக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை... புதிய தலைமைச் செயலகத்தை இதுக்கு தான் பயன்படுத்தணும்னு எந்த ஆர்டரும் இல்லை... அதனால, கோர்ட் அவமதிப்பு வராது'ன்னு சொல்றா...'' என்றார் குப்பண்ணா; பெஞ்ச் அமைதியானது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us