என்னை முன்னிலைப்படுத்தி யாத்திரை இல்லை: அத்வானி
என்னை முன்னிலைப்படுத்தி யாத்திரை இல்லை: அத்வானி
என்னை முன்னிலைப்படுத்தி யாத்திரை இல்லை: அத்வானி
UPDATED : அக் 13, 2011 10:51 PM
ADDED : அக் 13, 2011 10:41 PM

வாரணாசி: ''சமீப காலமாக அதிகரித்து வரும் ஊழலால், மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த விஷயத்தில் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகவே, ரத யாத்திரை நடத்துகிறேன்; என்னை முன்னிலைப் படுத்துவதற்காக இந்த யாத்திரயை நடத்தவில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
ஊழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, நாடு தழுவிய ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். மூன்றாவது நாளான நேற்று, உ.பி.,யில் அவர் ரத யாத்திரை மேற்கொண்டார். வாரணாசிக்கு சென்ற அத்வானி, அங்குள்ள விசுவநாதர் கோவிலில் பிரார்த்தனை நடத்தினார்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் அவர் பேசியதாவது: என்னை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த ரத யாத்திரையை நான் நடத்தி வருவதாக, ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த விஷயத்தில் எனக்கோ, கட்சிக்கோ, எந்த தொடர்பும் இல்லை. தற்போது ஊழல் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இந்த நம்பிக்கையை மக்கள் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகவே, ரத யாத்திரை நடத்துகிறேன். மேலும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, நாட்டுக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் யாத்திரை நடத்துகிறேன்.
கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாகவே, விலைவாசி உயர்ந்துள்ளது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை எல்லாம், திரும்பக் கொண்டு வந்தால், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை திட்டங்களை நிறைவேற்றி விடலாம். ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு சரியாகச் செயல்படவில்லை. பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு மூலமாகவோ, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் மூலமாகவோ மட்டுமே, ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மத்திய அரசின் நடவடிக்கையால், எந்த ஊழலும் வெளிச்சத்துக்கு வரவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததில், பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு முக்கிய பங்கு உண்டு. இதற்காக, அவரைப் பாராட்டுகிறேன். இவ்வாறு அத்வானி பேசினார்.
இந்த விழாவில் பா.ஜ., மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, கல்ராஜ் மிஸ்ரா, உமா பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா : பா.ஜ.,வில் பிரதமர் பதவிக்கு தகுதியான தலைவர்கள் பலர் இருக்கின்றனர். அதில் நானும் அடக்கம். பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை, லோக்சபா தேர்தல் வரும்போது, கட்சித் தலைமை முடிவு செய்யும். அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக, மீடியாக்கள் தான் செய்தி வெளியிடுகின்றன. மன்மோகன் சிங்கின் தற்போதைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன், அவரிடம் உள்ள பிரதமர் பதவியை ராகுலுக்கு கொடுக்கப் போவதாக காங்கிரசுக்குள் ஒரு பேச்சு உள்ளது. இதை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காகவே, அத்வானிக்கும், மோடிக்கும் இடையே பிரச்னை உள்ளதாக தகவல் பரப்புகின்றனர்.


