PUBLISHED ON : ஜூலை 12, 2011 12:00 AM

ஹேமமாலினியின் புது அவதாரம்
விலங்குகள் மீது பிரியம் கொண்டவர்களின் எண்ணிக்கை, பா.ஜ.,வில் அதிகரித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.,யான மேனகாவைப் பற்றி தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. விலங்குகளுக்கோ, சுற்றுச் சூழலுக்கோ ஒரு பிரச்னை என்றால், கொந்தளித்து விடுவார். டில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே இருந்த மரத்தை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, மாநகராட்சி ஊழியர்கள் வெட்டினர். இதைப் பார்த்த மேனகாவுக்கு, கோபம் கண்களை மறைத்து விட்டது. ஊழியர்களை வீட்டுக்கு அழைத்த மேனகா, அவர்களின் கன்னத்தில் பளார் விட்டு, ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். இப்போது மேனகாவுக்கு போட்டியாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மற்றொரு பெண் எம்.பி.,யும் களத்தில் குதித்துள்ளார். முன்னாள் பாலிவுட் நடிகையான ஹேமமாலினி தான், அந்த பிரபலம். தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், காளைகள் கொடுமைப் படுத்தப்படுவதாக, அவர் கொந்தளித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச் சூழல் அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார். ஹேமமாலினியின், இந்த புது அவதாரத்தை கேள்விப்பட்ட காங்கிரஸ் கட்சியினர், 'சபாஷ், மேனகாவுக்கு சரியான போட்டி, ஹேமமாலினி தான். மக்களிடம், தங்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகத் தான், இவர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்' என, கிண்டலடிக்கின்றனர்.