ஆர்ஜித சேவா டிக்கெட் பெற எலக்ட்ரானிக் லாட்டரி முறை
ஆர்ஜித சேவா டிக்கெட் பெற எலக்ட்ரானிக் லாட்டரி முறை
ஆர்ஜித சேவா டிக்கெட் பெற எலக்ட்ரானிக் லாட்டரி முறை
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் மிக முக்கிய சேவா டிக்கெட்டுகளாகக் கருதப்படும் தோமாலை, அர்ச்சனை, வஸ்திர அலங்காரம், அபிஷேகம் போன்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை, பக்தர்கள் தங்களது அதிர்ஷ்டப்படி பெற்றுக் கொள்ளும் புதிய நடைமுறை திட்டத்தை, திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.
இது வரையில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை சிலர், அதிக அளவில் சில ஆண்டுகளுக்கு முன்பதிவு செய்திருந்தனர்.
திருமலை கோவிலில் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில் தோமாலை, அர்ச்சனை சேவைகள் நடத்தப்படுகின்றன. இந்த தினங்களில் இதற்கான டிக்கெட்டுகள் பெற விரும்பும் பக்தர்கள், முன்தினம் மாலை 6 மணிக்கு சி.ஆர்.ஓ., அலுவலகத்திற்கு தங்களின் புகைப்பட அடையாள அட்டையுடன் சென்று, 6.30 மணி வரை தங்கள் பெயரை தனிநபரா, தம்பதியினரா என்ற விவரங்களுடன், கவுன்டரில் உள்ள அதிகாரியிடம் தெரிவித்து பதிவு செய்து கொண்டால், இவர்கள் அனைவரின் பெயரும், எலக்ட்ரானிக் லாட்டரி முறைப்படி பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பெற, அங்கு வந்துள்ள பக்தர்களில் ஒருவரை அழைத்து, கவுன்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பட்டனை அழுத்தச் சொல்லி, அதில் பதிவாகும் எண்களின்படி, பக்தர்களின் பெயர்கள் எலக்ட்ரானிக் திரை மூலம் மாலை 6.35 மணிக்கு அறிவிப்பு செய்யப்படும். இவர்கள், 15 நிமிடங்களில் இந்த டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, இம்மாதம் 1ம் தேதி முதல், 142 தோமாலை, 95 அர்ச்சனை, 10 வஸ்திர அலங்காரம், ஒன்பது அபிஷேக சேவைக்கான டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளியன்று நடத்தப்படும் வஸ்திர அலங்காரம், அபிஷேக டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள், ஒரு நாள் முன்னதாக வியாழனன்று மாலை 6 மணிக்கு சி.ஆர்.ஓ., அலுவலகம் வர வேண்டும். முன்பதிவு மூலம் பதிவு செய்து கொண்ட சேவா டிக்கெட்டுகளுக்கு தேவஸ்தானம் நிர்ணயம் செய்துள்ள தோமாலை, அர்ச்சனை டிக்கெட்டுகள் 220 ரூபாய், வஸ்திர அலங்கார சேவை 12,250 ரூபாய், அபிஷேகம் டிக்கெட் 750 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இதே சேவா டிக்கெட்டுகளை சிபாரிசு கடிதம் மூலம் வரையறுக்கப்பட்ட கோட்டா ஒதுக்கீடு மூலம் பெற விரும்புவர்களுக்கு, வஸ்திர அலங்காரம் டிக்கெட் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய், அபிஷேகம் டிக்கெட் 2,500 ரூபாய், தோமாலை, அர்ச்சனை டிக்கெட்டுகள் 440 ரூபாய் என, தேவஸ்தான நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. திருமலையில் சி.ஆர்.ஓ., அலுவலக கவுன்டர் மூலம், அதிர்ஷ்ட முறையில் கிடைக்கும் சேவா டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள விரும்பும் பக்தர்கள், கண்டிப்பாக முகவரி புகைப்படத்துடன் உள்ள அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.