ADDED : செப் 29, 2011 01:50 AM
புதுச்சேரி : இந்திராநகர் தொகுதியில் அ.தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்திராநகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதியிலுள்ள 27 வார்டுகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க., சார்பில் வார்டு வாரியாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்து வருகின்றனர். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புடன் தேர்தல் பிரசாரத்தையும் நடத்தி வருகின்றனர்.அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் வீடு, வீடாக சென்று நூதன முறையில் நேற்று காலை திண்ணைப் பிரசாரத்தை நடத்தினர்.தொகுதியில் ஏற்கனவே உள்ள குறைகள், இதுவரை தீர்த்து வைக்கப்படாத பிரச்னைகள், தீர்த்து வைக்காததற்கு யார் காரணம் உள்ளிட்டவைகளை வாக்காளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தெரிவித்து அவர்களை தங்கள் கட்சி பக்கம் ஈர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கினர்.


