Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வாலிபரை நிர்வாணமாக்கி கொடுமை : மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை

வாலிபரை நிர்வாணமாக்கி கொடுமை : மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை

வாலிபரை நிர்வாணமாக்கி கொடுமை : மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை

வாலிபரை நிர்வாணமாக்கி கொடுமை : மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை

ADDED : ஜூலை 14, 2011 01:39 AM


Google News

சேலம் : சேலம் போலீஸ் ஸ்டேஷனில், நிர்வாண கொடுமைக்கு ஆளான வாலிபருக்கு, மனித உரிமை ஆணைய உத்தரவுப்படி, 35 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

இத்தொகையை, இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட மூவரிடம் பகிர்ந்து வசூலிப்பதோடு, அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன், 36; பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி, குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்கிறார். இது தொடர்பாக, 2007ல், அதே பகுதியில் வசிக்கும் மாது என்ற மாதேஷ், அவரது மகன் கிருஷ்ணன் ஆகியோர், சரவணனை தாக்கினர்.

பாதிக்கப்பட்ட சரவணனை, போலீஸ் உதவி கமிஷனர் பிலிப்தாமஸ், அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். அப்போது, பணியில் இருந்த போலீஸ் ஏட்டு முருகன், சரமாரியாக தாக்கியதில், சரவணன் படுகாயம் அடைந்தார்.

சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணனை, இன்னொரு புகாரில் போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த சரவணனுக்கு, போலீசார் தாக்கியதில் உடலில் புண்கள் ஏற்பட்டு, குணமாகாமல் அவதிப்பட்டார்.

இதுகுறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் சரவணன் புகார் செய்தார். விசாரணையில், சரவணனை நிர்வாணப்படுத்தி, போலீசார் கொடுமைப்படுத்தியது ஊர்ஜிதமானது. பாதிக்கப்பட்ட சரவணனுக்கு, 35 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், அத்தொகையை இன்ஸ்பெக்டர் முத்துராஜ், எஸ்.ஐ.,ரவிக்குமார் ஆகியோரிடம் தலா, 10 ஆயிரம் ரூபாயும், ஏட்டு முருகனிடம், 15 ஆயிரம் ரூபாய் வசூலித்து வழங்க வேண்டும்; மூவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, தமிழக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. அதன் எதிரொலியாக, அரசு தரப்பில், 35 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி, பாதிக்கப்பட்ட சரவணனுக்கு வழங்கப்பட்டது.

சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் கூறியதாவது: மனித உரிமைகள் ஆணைய உத்தரவுப்படி, பாதிக்கப்பட்ட சரவணனுக்கு, 35 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டது. இத்தொகையை பெற, வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் முத்துராஜ், பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஸ்டேஷனில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சேலம் அழகாபுரம் ஸ்டேஷனில் பணிபுரியும், ஏட்டு முருகன் ஆகியோருக்கு, 'ரெக்கவரி நோட்டீஸ்' அனுப்பி, அவர்களது சம்பளத்தில் இருந்து தலா, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை தவணை முறையில் பிடித்தம் செய்யப்படும். அதே நேரத்தில், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us