PUBLISHED ON : ஜூலை 13, 2011 12:00 AM

தமிழக முதல்வர் ஜெயலலிதா: ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, மாநிலம் முழுவதும் உள்ள, 1,059 நலத்துறை விடுதிகளில், பழுது பார்ப்பு, சிறப்பு பராமரிப்பு, கூடுதல் கட்டுமானப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காக, 76 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்துள்ளேன்.
டவுட் தனபாலு: இதே, 1,059 நல விடுதிகளை ஒரு வருஷம் கழிச்சுப் போய்ப் பாருங்க... அப்போ தான், நீங்க ஒப்பளிப்பு செய்த, 76 கோடி ரூபாயும், இதுவரை ஒதுக்கப்பட்ட கோடிகளும், உண்மையிலேயே எங்கே போச்சுங்கிறது தெரியவரும்...!
தமிழக அரசு செய்திக்குறிப்பு: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து, வெளிமாநிலத்துக்கு கடத்த இருந்த, 160 கிலோ ரேஷன் அரிசியை, தமிழக உணவுத் துறை
அமைச்சர் புத்தி சந்திரன் பறிமுதல் செய்தார்.
டவுட் தனபாலு: துரதிர்ஷ்டக்கட்டையா இருப்பார் போலத் தெரியுது... அவருக்கு, 160 கிலோ தான் கிடைச்சிருக்கு... ஒருவேளை அங்கேயும், 'இவ்ளோ தான் இருப்பு வைக்கணும்'னு உத்தரவு போட்டிருந்தீங்களோ...!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் துடிக்கும் எதிர்ப்பாளர்கள், சுப்ரீம் கோர்ட் வழங்கிய கெடு முடிவுற்றதும், உடனே ஐகோர்ட்டை அணுகி, இடஒதுக்கீட்டை முடக்கத் துடிக்கின்றனர். இதைத் தடுக்க, ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை, முதல்வர் ஜெயலலிதா, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: என்னத்த பெரிய, 'போர்க்கால' நடவடிக்கை...! 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான அம்மாவோட அறிக்கையை முழுசா படிச்சுப் பாருங்க... எப்படி, 'சுனாமி' வேகத்துல நடவடிக்கை எடுத்திருக்காங்கன்னு தெரியும்...!


