சபாநாயகர் தொகுதியில் மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் வினியோகம்
சபாநாயகர் தொகுதியில் மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் வினியோகம்
சபாநாயகர் தொகுதியில் மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் வினியோகம்
ADDED : செப் 17, 2011 12:19 AM
ராயபுரம்: ''விலையில்லாமல் ஓட்டு போட்ட மக்களுக்கு, விலையில்லா வீட்டு உபயோகப் பொருட்கள்'' என, ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார் பேசினார். சபாநாயகர் ஜெயக்குமார் தொகுதியான ராயபுரத்தில், நேற்று அப்பகுதி மக்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், மாணவர்களுக்கு லேப்-டாப் ஆகியவை வழங்கப்பட்டன.
பொருட்களை வழங்கி, சபாநாயகர் ஜெயக்குமார் பேசியதாவது: ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என, கருணாநிதியின் பேச்சிற்கு பதிலளிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா விலையில்லாமல் ஓட்டு போட்ட உங்களுக்கு, விலையில்லா பொருட்களை வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினார். இதை யாரும் இலவசம் என்று அழைக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். இது, தமிழக மக்கள் மீது, அவர் வைத்துள்ள மரியாதையை குறிக்கிறது. மாணவர்களுக்கு லேப்-டாப் அளித்ததில், முதல்வரின் தொலைநோக்குப் பார்வை அடங்கியுள்ளது. அதாவது, ஒரு நல்ல ஆசிரியர் நேரடியாகப் பாடம் நடத்தினால், குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே பயனடைவர். ஆனால், அதே ஆசிரியர் நடத்தும் பாடத்தை, சாட்டிலைட் மூலம் லேப்-டாப் வழியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் கற்க முடியும். அரிசி ரேசன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும், பொருட்கள் கிடைக்கும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதற்கு முத்தாய்ப்பாக, அவசர கோலத்தில் கட்டப்பட்ட, ஒன்றுக்கும் உதவாத சர்க்கஸ் கூடாரம் போல் காட்சியளிக்கும் புதிய தலைமைச் செயலகத்தை, சிறப்பு வசதிகள் கொண்ட சர்வதேசத் தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்ற திட்டமிட்டுள்ளார். இது, மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இவ்வாறு, சபாநாயகர் ஜெயக்குமார் பேசினார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., வெற்றிவேல், எம்.பி., பாலகங்கா, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், பகுதிச் செயலர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.