Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஒகேனக்கல்லில் போலீஸ் கட்டுப்பாடு அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் போலீஸ் கட்டுப்பாடு அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் போலீஸ் கட்டுப்பாடு அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் போலீஸ் கட்டுப்பாடு அதிகரிப்பு

ADDED : செப் 12, 2011 02:17 AM


Google News
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியில் வெள்ள பெருக்கு காரணமாக நீர் வீழ்ச்சிகளில், ஆற்றுப்படுகை பகுதியில் குளிக்கவும், பரிசல் பயணத்துக்கும் முழு அளவில் தடை விதிக்கப்பட்டதால், வெள்ள பெருக்கு காலங்களில் உயிர் பலியாவது தடுக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த ஒகேனக்கல்லில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். காவிரியின் அழகை ரசிக்க பல பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீர் வீழ்ச்சி, ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்படுகையின் நிலை என்ன என்பது குறித்து தெரிவதில்லை.சுற்றுலா வரும் பயணிகள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத பல பகுதிகளில் தங்கள் இஷ்டம் போல் குளிப்பதும், பரிசல் பயணம் செய்வதும் நடந்து வந்தது. பல பயணிகள் நீர் சுழல் உள்ள பகுதியில் குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்படும் சம்பவம் அதிகம் உண்டு.

ஒகேனக்கல் காவிரி, சின்னாறு சந்திப்பு பகுதி, கேத்திக்கல், ஆலம்பாடி, மறுகரை, மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் ஆழம் பல அடிகள் இருப்பதால், இந்த பகுதியில் சாதாரணமாக நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீர் சுழலில் சிக்கி கொண்டால் மீண்டு வருவது பெரும் கடினம்.

இது போன்ற இடங்களில் கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் தங்கள் இஷ்டம் போல் குளித்து வந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் பரிசல்களில் சென்று இஷ்டம் போல் குளித்து மகிழ்ந்தனர். தற்போது, கடந்த ஆறு நாட்களாக ஒகேனக்கல்லில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வெள்ள பெருக்கு காலங்களில் நீர் வீழ்ச்சிகளில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை இருக்கும். ஆற்றுப்படுகையில் தங்கள் இஷ்டம் போல் குளித்து மகிழ்வார்கள். தற்போது, போலீஸார் வெள்ள பெருக்கு காலங்களில் நீர் வீழ்ச்சிகளில் குளிக்கவும், ஆற்றுப்படுகையில் குளிக்க முழு அளவில் தடை விதித்துள்ளனர்.நீர் வரத்து குறைவாக உள்ள பகுதியில் மட்டும் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சின்னாறு பகுதியில் மட்டும் பயணிகள் கடந்த ஆறு நாட்களாக குளிக்கின்றனர். விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்ய கூட கூத்தப்பாடி முதலை பண்ணை எதிரில் உள்ள காவிரியில் 5 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதே போன்று ஆற்றுப்படுகையில் பாதுகாப்பாக உள்ள குறிப்பிட்ட தூரத்தில் மட்டுமே பயணிகள் சென்று குளிக்க போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஒகேனக்கல் காவிரியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதோடு, ஆபத்து நிறைந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டாம் என தொடர்ந்து அறிவிப்பு செய்ததோடு, தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.கடந்த காலங்களில் வெள்ள பெருக்கு காலங்களில் சுற்றுலா பயணிகள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பு ஏற்படும். கடந்த ஒரு வாரத்தில் குளிக்க முழு அளவில் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் யாரும் ஆற்று நீரில் பலியாகும் சம்பவம் நடக்க வில்லை.தடை ஒரு பக்கம் இருந்த போதும், தொடர் கண்காணிப்பு மூலம் உயிர் பலி தவிர்க்கப்பட்டுள்ளது. வரும் காலங்களிலும் வெள்ள பெருக்கு காலங்களில் முழு அளவில் தடை விதித்து, ஆபத்து நிறைந்த பகுதிகள் குறித்து பயணிகளுக்கு அறிவிப்பு செய்து உயிர் பலிகளை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us