/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மக்கள் பிரதிநிதிகளுடன் எம்.பி., ஆலோசனைமக்கள் பிரதிநிதிகளுடன் எம்.பி., ஆலோசனை
மக்கள் பிரதிநிதிகளுடன் எம்.பி., ஆலோசனை
மக்கள் பிரதிநிதிகளுடன் எம்.பி., ஆலோசனை
மக்கள் பிரதிநிதிகளுடன் எம்.பி., ஆலோசனை
ADDED : செப் 11, 2011 01:00 AM
கிருஷ்ணகிரி: ''மத்திய அரசின் திட்டப்பணிகளை தேர்வு செய்யும் போது, மக்கள்
பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் கலந்து ஆலோசிக்க வேண்டும்,'' என கிருஷ்ணகிரி
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில், எம்.பி., சுகவனம் வேண்டுகோள்
விடுத்தார்.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட விழிப்பு மற்றும்
கண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் எம்.பி., சுகவனம் தலைமை
வகித்தார். உறுப்பினர் செயலாளர் கலெக்டர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பொன்விழா கிராம சுய வேலை
வாய்ப்பு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், முழு சுகாதார
திட்டம், வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டம், ஒருங்கிணைந்த தரிசு நில
மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய சமூக
நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம்
குறித்து விவாதிக்கப்பட்டது.
எம்.பி., சுகவனம் பேசியதாவது:கண்காணிப்பு
குழுவின் முக்கிய நோக்கம், மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும்
திட்டப் பணிகளை கண்காணிப்பதும் ஆய்வு செய்வதாகும். திட்டப்பணிகளை
செயல்படுத்துவதில் ஏற்படும் பிரச்னைகளை அலுவலர்கள் தெரிவித்தால், அதை சரி
செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த கூட்டத்தில்
சுட்டிக்காட்டப்பட்ட, 15 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய ஊரக
வேலை உறுதி திட்டத்திற்கு இந்த ஆண்டு, 107 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு,
இதுவரை, 40 கோடியே 57 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.இதன்
மூலம், 1851 பணிகள் எடுக்கப்பட்டு, 65 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 30
சதவீத பணிகள் இலக்கு எய்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைவாக
முடிக்கவும் மனித சக்தி நாட்களை மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கடந்த ஆண்டு, 3,202
பணிகள் எடுக்கப்பட்டு, 1184 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 2018 பணிகள்
முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்த ஆண்டு 3128 வீடுகள் கட்ட இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், பொன் விழா கிராம சுய வேலை வாய்ப்பு
திட்டத்துக்கு கடந்த ஆண்டு, 4 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு உரிய இலக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிராம
சாலைகள் திட்டத்தின் கீழ், இதுவரை, 67 பணிகள் எடுக்கப்பட்டு, 65 பணிகள்
முடிக்கப்பட்டு, 125 கிலோ மீட்டர் தூரம் சாலைகள்
போடப்பட்டுள்ளது.வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் திட்டம், ஒருங்கிணைந்த
தரிசு நில மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேம்பாட்டு
திட்டம் ஆகியவற்றின் கீழ் பணிகள் தேர்வு செய்யும் போது மக்கள் பிரதிநிதிகளை
கலந்து ஆலோசித்து பணிகளை அதிகாரிகள் தேர்வு செய்ய வேண்டும்.
முழு சுகாதார இயக்கத்தின் கீழ் கடந்த ஆண்டு தனி நபர் இல்லக் கழிப்பறைகள்,
30 ஆயிரம் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 14,956 மட்டுமே
முடிக்கப்பட்டுள்ளது. பள்ளி கழிப்பறைகள், 482 கட்டுவதற்கு இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு, 146 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி
கழிப்பறைகள், 176 கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு இதுவரை, 6 மட்டுமே
கட்டப்பட்டுள்ளது.துறை அலுவலர்கள் தனி நபர் கழிப்பிடம் கட்டுவதை
ஊக்குவித்து, 100 சதவீதம் இலக்கை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த
ஆண்டு எட்டு பஞ்சாயத்து யூனியன்களில் சேர்ந்த, 25 பஞ்சாயத்துகள் நிர்மல்
புரஷ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., பிரகாசம், உறுப்பினர் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், ஊரக வளர்ச்சி
முகமை திட்ட அலுவலர் தனசேகரன், மகளிர் திட்ட அலுவலர் ராமைய்யா, மாவட்ட
பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், யூனியன் சேர்மேன்கள் வேப்பனப்பள்ளி
முருகன், பர்கூர் ராஜேந்திரன், காவேரிப்பட்டணம் ஆதி மகேந்திரன் உட்பட பலர்
கலந்து கொண்டனர். உதவி திட்ட அலுவலர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.