மும்பை தெருக்களை காலி செய்ய வேண்டும்: இட ஒதுக்கீடு கோரும் போராட்டக்காரர்களுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
மும்பை தெருக்களை காலி செய்ய வேண்டும்: இட ஒதுக்கீடு கோரும் போராட்டக்காரர்களுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
மும்பை தெருக்களை காலி செய்ய வேண்டும்: இட ஒதுக்கீடு கோரும் போராட்டக்காரர்களுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
ADDED : செப் 01, 2025 06:44 PM

மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜராங்கேயின் ஆதரவாளர்கள், மும்பை தெருக்களை நாளைக்குள்( செப்.,02) காலி செய்ய வேண்டும் என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுஉள்ளது. இந்த போராட்டம் அமைதியாக நடக்கவில்லை. அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.
தடை
மராத்தா சமூகத்தினர் அனைவரையும் ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மஹா., அரசை அவர் வலியுறுத்தி வந்தார். இதையடுத்து, 2018ல், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டத்துக்கு தடை விதித்தது. இதனால், அதை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், இடஒதுக்கீடு பிரச்னையை மீண்டும் கையில் எடுத்த மராத்தா இடஒதுக்கீடு இயக்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான மனோஜ் ஜராங்கே, மும்பையில் ஆக.,29 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அவருக்கு காலை 9:00 முதல் 6:00 மணி வரை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
உண்ணாவிரதம்
திட்டமிட்டபடி, ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய ஜராங்கே, அதை முடிக்காமல் தொடர்ந்தார். மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்தார்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் கூடியுள்ளனர். ரயில் நிலையங்கள் முன்பும் திரண்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இதனிடையே, மராத்தியர்களின் கோரிக்கையை மாநில அரசு செவி கொடுத்து கேட்காவிட்டால், 5 கோடி பேர் தலைநகரை நோக்கி வருவார்கள் என எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு எதிரான வழக்கை மும்பை ஐகோர்ட் விசாரித்தது. அப்போது, இந்த போராட்டம் அமைதியாக நடக்கவில்லை. அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டு உள்ளன. இதனை சரி செய்ய வேண்டும் எனக்கூறியதுடன் ஆசாத் மைதானம் பகுதியை தவிர்த்து மும்பை தெருக்களில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.