கருணை அடிப்படையில் நியமனமானவர் பணி நீக்கத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
கருணை அடிப்படையில் நியமனமானவர் பணி நீக்கத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
கருணை அடிப்படையில் நியமனமானவர் பணி நீக்கத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
ADDED : செப் 04, 2011 01:19 AM
சென்னை: தந்தை இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின், கருணை அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டவரை, பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. செங்கல்பட்டு ஐ.டி.ஐ.,யில் உதவியாளராகப் பணிபுரிந்த முனுசாமி, பணியில் இருக்கும் போது, 1975, மே மாதம் மரணமடைந்தார். இவரது மகன் கணேசனுக்கு, கருணை அடிப்படையில் வாட்ச்மேன் வேலைக்கான நியமன உத்தரவை, டிச., 1994ல், செங்கல்பட்டு ஐ.டி.ஐ., முதல்வர் பிறப்பித்தார். இவரது பணியை வரன்முறை செய்ய, சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனருக்கு மனு அனுப்பப்பட்டது. மேலும், பணியில் நியமிக்கப்படும் போது, 30 வயதைத் தாண்டியதால், கணேசனுக்கு வயது வரம்பைத் தளர்த்தவும் கோரப்பட்டது. இதை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நிராகரித்தது.
தந்தை இறந்தவுடன், கணேசனின் சகோதரருக்கு திருமணம் நடந்துள்ளது; எனவே, கணேசனின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது என எடுத்துக் கொள்ள முடியாது; மேலும், முனுசாமி இறந்து, 20 ஆண்டுகளுக்குப் பின், கணேசனுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. பணி நீக்க உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் கணேசன் மனுத் தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சாகுல் அமீது, 'அரசு ஊழியர் இறந்து, மூன்று ஆண்டுகளுக்குள் கருணை அடிப்படையில் வேலை கோர வேண்டும் என, 1995ல் தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு முன் ஏற்பட்ட இறப்புகளுக்கு, இந்த அரசாணை பொருந்தாது' என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:கருணை அடிப்படையில், 20 ஆண்டுகளுக்குப் பின் வேலை வழங்கியதற்கு, மனுதாரரைக் குறைகூற முடியாது. மேலும், காலவரம்பைக் கருத்தில் கொள்ளாமல், பலருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் குடும்பம் ஏழ்மையில் உள்ளதா, இல்லையா என்பதை தனியாக விசாரித்திருக்க வேண்டும். வேலை வழங்கும் போது, இதுகுறித்து அறிக்கை பெறப்பட்டதா எனத் தெரியவில்லை. வேலை வழங்கி பல ஆண்டுகளுக்குப் பின், மனுதாரரின் குடும்பம் ஏழ்மை நிலையில் இல்லை என்றும், தந்தை இறந்த உடன் மனுதாரரின் சகோதரர் திருமணம் செய்து கொண்டார் என்றும் காரணம் காட்டி, பணி நீக்கம் செய்ய முடியாது. பணி நீக்கத்துக்கு முன், மனுதாரர் தரப்பைக் கேட்கவில்லை. இது இயற்கை நியதிக்கு மாறானது. எனவே, பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.