ADDED : செப் 01, 2011 02:07 AM
மதுரை : 'மதுரை மாநகராட்சியில் வாங்கும் பல்புகளுக்கான ஆய்வில் 'தில்லுமுல்லு' நடப்பதாக,' கவுன்சிலர்கள் கமிஷனரிடம் புகார் செய்தனர்.வார்டுகளுக்கான தெருவிளக்கு பராமரிப்பு பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக வாங்கும் பல்புகள், ஆய்வுக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. சமீபமாக, புதிதாய் பொருத்தப்படும் பல்புகள், ஓரிரு நாட்களில் 'பீஸ்' போகின்றன. இது குறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கமிஷனர் நடராஜனிடம் புகார் செய்தனர். கவுன்சிலர் மாரியப்பன் கூறியதாவது: புதிதாக போடும் பல்புகள் இரண்டு நாட்களில் எப்படி 'பீஸ்' போகும்? தரமான பல்புகள் வாங்கியும், அதை ஆய்வு செய்ய போகும் இடத்தில் தான் குளறுபடி நடக்கிறது. அதை முதலில் கண்டறிய வேண்டும், என்றார். கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.