தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் தர எந்த விலக்கும் இல்லை : லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தல்
தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் தர எந்த விலக்கும் இல்லை : லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தல்
தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் தர எந்த விலக்கும் இல்லை : லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தல்
கோவை : லஞ்ச ஒழிப்புத்துறை பற்றிய விவரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தில் வழங்குவதற்கு தடையில்லை என்று, தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2008க்கு முன்பு வரையிலும், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான விவரங்களும், விசாரணை முடிந்த வழக்குகள் தொடர்பான விவரங்களும் தகவல் உரிமைச் சட்டத்தில் தரப்பட்டு வந்தன. தி.மு.க., ஆட்சியின் போது, கடந்த 2008ல் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், தகவல் உரிமைச் சட்டத்தில், இத்துறை தொடர்பான விவரங்களைத் தர விலக்கு அளிக்கப்பட்டது. விசாரணையின் துவக்க நிலையிலிருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை, ரகசியம் காக்கும் பொருட்டு, இதை வழங்க வேண்டாமென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கை, தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது; கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'விசாரணையில் இல்லாத மற்றைய வழக்குகள், துறை தொடர்பான விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தில் வழங்க வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்தன.
மாநில தகவல் ஆணையத்துக்கும் புகார்கள் குவிந்தன. அதன்பேரில், 'தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் கோருவோருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான விவரங்களைத் தர வேண்டும்' என்று மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட் சென்றது. மாநில தகவல் ஆணையம் தந்த உத்தரவு, சரிதான் என்று ஐகோர்ட் உறுதிப்படுத்தியது. டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை; அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை தயாராகி வந்தது.
இது தொடர்பாக, தலைமைச் செயலர் மற்றும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனருக்கு கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் எழுதிய கடிதத்தில், 'விசாரணைக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பிற விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தில் வழங்க வேண்டும்; மேல் முறையீடுக்கு ஒப்புதல் தராமல், ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கோரியிருந்தார். இந்த கோரிக்கையை இப்போது அரசு ஏற்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கதிர்மதியோனுக்கு தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறையிலிருந்து வந்துள்ள பதிலில், 'தகவல் உரிமைச் சட்டத்தில் கோரப்படும் மனுக்களுக்கு தகவல் தர தடையில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்று கூறியுள்ளார்.இதிலிருந்தே, இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் முறையீடு செய்ய அரசு ஒப்புதல் தரவில்லை என்பது உறுதியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையால் கடந்த 3 ஆண்டுகளாக பொத்திப் பாதுகாக்கப்பட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான ரகசியங்கள், இனி வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் என்று நம்பலாம்.