Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரோட்டிலே செத்தால் 5 லட்சம்; காட்டிலே செத்தால் 3 லட்சம்

ரோட்டிலே செத்தால் 5 லட்சம்; காட்டிலே செத்தால் 3 லட்சம்

ரோட்டிலே செத்தால் 5 லட்சம்; காட்டிலே செத்தால் 3 லட்சம்

ரோட்டிலே செத்தால் 5 லட்சம்; காட்டிலே செத்தால் 3 லட்சம்

ADDED : ஆக 28, 2011 12:56 AM


Google News

கோவை:கோவையில் காட்டு யானை மிதித்துக் கொன்ற வனத்துறை ஊழியருக்கு, 5 லட்சத்துக்குப் பதிலாக, 3 லட்ச ரூபாய் வழங்கியிருப்பது, வனத்துறை ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கோவை வனக்கோட்டத்தில் வனக்காப்பாளராகப் பணியாற்றி வந்த நடேசனும், வனக்காவலர் சந்திரசேகரனும், கடந்த 7ம் தேதி சோளக்கரை என்ற வனப்பகுதியில், மரம் வெட்டும் சத்தம் கேட்டு, உள்ளே சென்று பார்க்கச் சென்றுள்ளனர்.

அப்போது, திடீரென எதிரே வந்த காட்டு யானை, இருவரையும் துரத்தித் தாக்கியதில், நடேசன் உயிரிழந்தார்; சந்திரசேகரன் படுகாயமடைந்தார்.



இறந்த நடேசன் குடும்பத்துக்கு, முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து, 5 அல்லது 10 லட்ச ரூபாய் வழங்கப்படுமென்று வனத்துறையினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பொதுமக்களில் யாராவது யானை தாக்கி இறந்தால், அவர்களது குடும்பத்துக்குத் தரப்படும் அதே, 3 லட்ச ரூபாய் மட்டுமே, நடேசனின் குடும்பத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, யானை மிதித்து உயிரிழந்த வனத்துறை ஊழியர்களின் குடும்பங்களுக்கு, 5 லட்ச ரூபாயும், கருணை அடிப்படையில் ஒருவருக்கு வேலையும் தரப்பட்டது.

கடந்த 2002ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது, சிறுமுகையில் யானை தாக்கி உயிரிழந்த வனக்காப்பாளர் சுரேந்திர ராஜா என்பவரின் குடும்பத்துக்குத்தான், முதன் முதலாக, 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.



அதைப் பின்பற்றி, கடந்த 2007ல் வெள்ளலூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த வனக்காவலர் பெருமாளின் குடும்பத்துக்கும், 5 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டது. ஆனால், நடேசனின் குடும்பத்துக்கு வெறும் 3 லட்ச ரூபாய் மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது; அதுவும் வனத்துறை நிதியிலிருந்தே தரப்படவுள்ளது. முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து எந்தத் தொகையும் அறிவிக்கப்படவில்லை.நடேசன் குடும்பத்துக்கு, 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டுமென்று வனத்துறை அதிகாரிகளின் பரிந்துரை ஏற்கப்படவில்லை என்று துறை வட்டாரங்கள் கூறுகின்றன.



அதேபோல, காயமடைந்த சந்திரசேகரனுக்கு, தனியார் மருத்துவமனையில், ஒன்றரை லட்ச ரூபாய் செலவிடப்பட்டு, அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்தத் தொகையை வழங்கவும், அரசு முன் வரவில்லை.சமீபத்தில், விபத்தில் பலியான போலீஸ்காரர் ஒருவரின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து, 5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டும் வனத்துறை ஊழியர்கள், ரோட்டிலே இறந்தால், 5 லட்சம், காட்டிலே இறந்தால், 3 லட்சம் என்பது எந்த வகை நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.



தமிழ்நாடு வன அலுவலர் சங்க மாநில பொதுச் செயலர் நசீர் கூறுகையில், 'முதல்வருக்குத் தெரிந்தால், நடேசனின் குடும்பத்துக்கு, 5 லட்ச ரூபாய் நிதி கிடைக்குமென்று நிச்சயமாக நம்புகிறோம்; அதற்காக முயற்சிக்கிறோம்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us