/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ரயில்வே திட்டத்தில் தென்மாவட்டங்கள் புறக்கணிப்புரயில்வே திட்டத்தில் தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு
ரயில்வே திட்டத்தில் தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு
ரயில்வே திட்டத்தில் தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு
ரயில்வே திட்டத்தில் தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு
ADDED : ஆக 24, 2011 02:38 AM
சங்கரன்கோவில் : தூத்துக்குடி- மதுரை இடையிலான புதிய ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு 601 கோடி ரூபாய்க்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது தென் மாவட்டங்களை புறக்கணிப்பதாக இருக்கிறது என பார்லிமென்ட்டில் எம்.பி., தங்கவேலு பேசினார்.
பார்லிமென்ட் கூட்டம் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் எம்.பி., தங்கவேலு பேசியதாவது: தூத்துக்குடி- மதுரை இடையே அரசால் அறிவிக்கப்பட்ட புதிய ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்டுள்ள இந்த இரு நகரங்களுக்கு இடையே புதிய ரயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வினை ரயில்வே அமைச்சர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே முடித்து, புதிய திட்டத்திற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடம் காரியாபட்டி, மல்லான்கிணறு, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் ஆகிய சிறிய நகரங்களை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், வ.உ.சி., துறைமுகத்தினை கொண்டுள்ள தூத்துக்குடி நகரத்துடன் நேரடித் தொடர்பினையம் பெறுகிறது. இந்த புதிய ரயில் பாதையினால் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களின் போக்குவரத்திற்கு உதவுவதோடு மற்ற மாநில பகுதிகளுக்கும் தொடர்பினை உருவாக்கும். மேலும் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கும். இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது பணியினை முடிப்பதற்கான உத்தேச செலவாக 601 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவித்த பிறகு தற்போது ஒரு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த பகல் நேர ரயில் போக்குவரத்து காரணமாக பணிக்கு செல்பவர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள் முக்கியமாக மதுரைக்கு மருத்துவ தேவைக்காக செல்லும் மக்கள் பயனடைவார்கள். இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாக பகல் நேர ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும். மேலும் தூத்துக்குடி- மதுரை புதிய ரயில் திட்டத்திற்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தென் மாவட்டங்களை புறக்கணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இப்புதிய ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எம்.பி., தங்கவேலு பேசியுள்ளார்.