PUBLISHED ON : ஆக 24, 2011 12:00 AM

தேசியக் கொடியால் வந்தது பிரச்னை!
கர்நாடக முதல்வர், சதானந்த கவுடாவுக்கு, புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின விழா தொடர்பான கையேடு, சமீபத்தில் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதில், தேசியக்கொடிக்கு மேல், சதானந்த கவுடாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இது போதாதா எதிர்க்கட்சியினருக்கு... வழக்கம் போல் பிரச்னையை எழுப்பி விட்டனர். அதிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., விஸ்வநாத், இந்த விஷயத்தை பூதாகரமாக்கினார். அவர் கூறுகையில்,'தேசியக்கொடியை விட, மேலானது எதுவும் இல்லை. ஆனால் சதானந்த கவுடா, தன்னைத் தான் உயர்ந்தவர் என நினைக்கிறார் போலும். தேசியக்கொடிக்குக் கீழே, முதல்வரின் படம் இடம்பெற்றிருந்தால், இந்த பிரச்னையை நாங்கள் எழுப்பியிருக்க மாட்டோமே! இந்த விஷயத்தில், கவுடாவை இரண்டில் ஒன்று பார்க்காமல் விடப்போவது இல்லை' என, பேயாட்டம் ஆடினார். இந்த விவகாரம், முதல்வர் கவுடாவுக்கு தெரியவந்ததும், நொந்து போய் விட்டார். 'அரசியல் செய்ய வேண்டியது தான்... அதற்காக, இவ்வளவு கீழ்த்தரமாக அரசியல் செய்யக் கூடாது. என் பதவி எப்போது பறிபோகுமோ என, ஏற்கனவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதில், தேசியக் கொடி விவகாரம் வேறு விஸ்வரூபம் எடுத்து
விட்டதே' என, விரக்தியில் புலம்பிக் கொண்டிருக்கிறார்.