Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்லூரி கட்டடம் இடிப்பு

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்லூரி கட்டடம் இடிப்பு

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்லூரி கட்டடம் இடிப்பு

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்லூரி கட்டடம் இடிப்பு

ADDED : ஆக 20, 2011 10:46 PM


Google News
Latest Tamil News

மதுரவாயல் : மதுரவாயலில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் கல்லூரியின் ஆறு மாடி கட்டடம் இடிக்கப்பட்டு, நிலம் மீட்கப்பட்டது.

மதுரவாயல் பகுதியில், வார்டு 2க்கு உட்பட்ட பகுதியில், பூந்தமல்லி நெடுஞ் சாலையை ஒட்டி, அரசுக்கு சொந்தமான நீர்நிலை ஆதாரமாக விளங்கும் குளம் உள்ள பகுதி இருக்கிறது. இரண்டு ஏக்கர் ஐந்து சென்ட் பரப்பளவு உள்ள இந்த பகுதி தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மதுரவாயல் பகுதியிலுள்ள, எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக நிர்வாகத்தினர் சர்வே எண் 13/2 பகுதியில், 45 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்திருந்தனர். அந்த இடத்தில் ராமலிங்கா பிளாக் என்ற பெயரில், ஆறு மாடி வகுப்பறை கட்டடம், கோவில், கேன்டீன், ஏ.டி.எம்., சென்டர், வாகன பார்க்கிங் வசதி உள்ளிட்டவைகளை அமைத்திருந்தனர். மீதமுள்ள இடத்தில், தனி நபர்கள் சிலர் கடைகளும், 30க்கும் மேற்பட்டோர் குடிசைகளும் அமைத்திருந்தனர்.



இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி, இரண்டு முறை அரசு தரப்பில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில், நேற்று அங்கு அரசு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர். காலை 10 மணியளவில், பொன்னேரி ஆர்.டி.ஓ., கந்தசாமி, அம்பத்தூர் தாசில்தார் மகாத்மா மற்றும் துணை தாசில்தார்கள் மதன், முரளி தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றனர். அவர்களின் மேற்பார்வையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கல்லூரி கட்டடம், கோவில், கேன்டீன், ஏ.டி.எம்., சென்டர் மற்றும் டைல்ஸ் கடை உள்ளிட்ட ஆறு கடைகள் இடிக்கப்பட்டன. பொக்லைன் இயந்திரம் மூலம் இக்கட்டடங்கள் நாள் முழுவதும் இடிக்கப்பட்டன. மதுரவாயல் உதவி கமிஷனர் ஐயப்பன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.



இது குறித்து தாசில்தார் மகாத்மா கூறியதாவது: கடந்த 2005ம் ஆண்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் அறிவுறையின் படி, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது அரசின் உத்தரவின் படி, நீர் நிலைகள் பாதுகாக்கும் நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் ஒன்னே கால் ஏக்கர் பரப்பளவு நிலம் மீட்கப்படவுள்ள நிலையில், மீதமுள்ள அரசு நிலத்தில், 30 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் மாற்று இடம் கொடுக்கப்பட்டு, அந்த இடமும் மீட்கப்படும். இந்த பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலை பகுதிகள் மீட்கும் நடவடிக்கை தொடரும்.இவ்வாறு மகாத்மா கூறினார்.



பதட்டத்தை தவிர்க்க விடுமுறை அறிவிப்பு : இது போன்ற நடவடிக்கைகள் நடக்கக்கூடும் என முன் கூட்டியே அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர், கடந்த 18ம் தேதியில் இருந்து வரும் செப்., 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். குறிப்பாக மின்சார பராமரிப்பு பணிக்காக விடுமுறை என, அறிவிப்பு பலகையில் கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தாலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் தேவையற்ற பதட்டத்தை தணிக்கவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us