தானியங்கி மழை மானி அமைக்கும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும்
தானியங்கி மழை மானி அமைக்கும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும்
தானியங்கி மழை மானி அமைக்கும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும்
ADDED : ஆக 18, 2011 12:09 AM
சென்னை : ''ஏ.ஆர்.ஜி., எனப்படும் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணிகள், தமிழகம் முழுவதும் மூன்று மாதத்தில் நிறைவடையும்'' என்று, சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பம், ஈரப்பதம், மழையின் அளவு ஒவ்வொரு பகுதிகளிலும் மாறி வருவதால், இதை கணக்கிடும் வகையில் தமிழகம் முழுவதும், ஏ.ஆர்.ஜி., (ஆட்டோமேடிக் ரெயின்பால் கேஜ்) தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. 5 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அடிப்படையில் மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில், முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கு இரண்டு வீதம், தமிழகம் முழுவதும் 71 தானியங்கி மழைமானிகளை அமைக்க, சென்னை மண்டல வானிலை மையம் முடிவு செய்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 10 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் இடங்களைத் தேர்வு செய்யும் பணியில், வானிலை மையம் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து, சென்னை மண்டல வானிலை மையத்தின் பொது துணை இயக்குனர் ராஜ் கூறியதாவது: முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் 71 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். சென்னையில் 10 இடங்களில் அமைக்க இருப்பதால், அதற்காக திறந்தவெளி நிலங்களை தேர்வு செய்யும் பணியில், சென்னை மண்டல வானிலை மையம் ஈடுபட்டு வருகிறது. வானிலை மையத்தை பற்றிய தகவல்களை மாணவர்கள் சேகரிக்க மற்றும் தெரிந்து கொள்வதற்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தானியங்கி மழைமானிகளை அமைக்க இடம் கேட்டு வருகிறோம். மேலும், தமிழகம் முழுவதும் இன்னும் முன்று மாதங்களில், தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும். கேளம்பாக்கம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியிலும், செங்குன்றத்தில் அரசு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மழைமானி அமைக்க, வானிலை மையத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் செலவாகிறது. இவ்வாறு ராஜ் கூறினார்.


