/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாலித்தீன் பைகளால் பாதிக்கப்படும் மாடுகள்பாலித்தீன் பைகளால் பாதிக்கப்படும் மாடுகள்
பாலித்தீன் பைகளால் பாதிக்கப்படும் மாடுகள்
பாலித்தீன் பைகளால் பாதிக்கப்படும் மாடுகள்
பாலித்தீன் பைகளால் பாதிக்கப்படும் மாடுகள்
ADDED : ஜூலை 31, 2011 02:44 AM
மதுரை:சுற்றுப்புறச் சூழலை கெடுக்கும் பாலித்தீன் பைகளால் ரோடுகளில் சுற்றி
திரியும் மாடுகள் பெரும் பாதிப்படைகின்றன.குப்பைத் தொட்டிக்கு வெளியில்
சிதறி கிடக்கும் பாலித்தீன் பைகளின் முடிச்சை அவிழ்க்கத் தெரியாத மாடுகள்,
பசியின் அவசரத்தால் அப்படியேவிழுங்கிவிடுகின்றன. மனிதர்களைப் போல
அவற்றுக்கு, வாந்தி எடுக்கத் தெரியாது. ஆடு,மாடுகளின் வயிறு 4 அறைகளுடன்
உள்ளன. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல சிறுதுவாரம் உள்ளது. வயிற்றில்
சேரும் பாலித்தீன், தலைமுடி போன்ற செரிமானம் ஆகாத பொருட்கள், பந்துபோல
திரண்டு உணவுப் பாதையை அடைக்கின்றன. வயிறு உப்பி, தீராத வலி ஏற்பட்டு
மரணம் நிகழ்கிறது.இதுபோன்ற நிகழ்வுகளில் மாடுகளை பிரேத பரிசோதனை செய்ததில்
ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், ஆணிகள், வயர்கள், நீளமான தலைமுடி
காணப்படுகின்றன. ஆணிகள் குடலை துளைத்து வேறு முக்கிய உறுப்புகளையும்
பாதிக்கின்றன. பிளாஸ்டிக் பொருளின் ரசாயன பொருள்களான பாலிவினைல் குளோரைடு,
கேட்மியம், காரீயம், அக்ரிலமைடு, பாலித்தீன் போன்றவை, மாடுகள் தரும் பாலின்
வழியே வெளியேறி, அதை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் பாதிப்பை தருகிறது.
தமிழ்நாடு அனிமல் வெல்பேர் டிரஸ்ட் செயலாளர் வெங்கடேசன், தலைவர்
வல்லையப்பன் கூறுகையில்,''இறந்த மாடுகளை சோதனை செய்ததில் வயிற்றில் நூறு
முதல் ஆயிரம் பைகள் வரை இருந்துள்ளன. எனவே காகிதம், துணிப் பையை
பயன்படுத்தலாம். ஆடு, மாடுகளை ரோட்டில் திரிய விடக்கூடாது. இதனால்
போக்குவரத்து பாதிப்பையும் தவிர்க்க முடியும். கால்நடை வளர்ப்போர், அவற்றை
கொட்டகையில் வளர்த்து, குடிநீர், புல், வைக்கோல் போன்ற தீவனங்களை வழங்க
வேண்டும். இதுகுறித்து அறிய 98426 84646ல் தொடர்பு கொள்ளலாம்,'' என்றனர்.