சேலம் போலீசில் அதிரடி களை எடுப்பு : மகிழ்ச்சி வெள்ளத்தில் நேர்மையான போலீசார்
சேலம் போலீசில் அதிரடி களை எடுப்பு : மகிழ்ச்சி வெள்ளத்தில் நேர்மையான போலீசார்
சேலம் போலீசில் அதிரடி களை எடுப்பு : மகிழ்ச்சி வெள்ளத்தில் நேர்மையான போலீசார்
சேலம்: சேலம் மாநரக போலீசில், மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மாநகர போலீசின் மெத்தனம், சமூக விரோத செயல்களுக்கு உடந்தை, தி.மு.க.,வின் பாசம் என, மாநகர போலீசாரில் பணியாற்றிய சில இன்ஸ்பெக்டர்கள் தாங்கள் அணிந்து இருப்பது, காச்சி சட்டை தான் என்பதை மறந்து, எல்லை மீறி, தி.மு.க.,வினருக்கு பரிவு காட்டி வந்தனர். இவர்களின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் தக்க ஆதாரத்துடன் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி, ஜார்ஜ்க்கு புகாராக பறந்தது.
கடந்த வாரம் டவுன் இன்ஸ்பெக்டர் அசோகன், அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் துரை, போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் தென் மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களின் பணி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களின் பணி இடத்துக்கான புதிய இன்ஸ்பெக்டர்கள் வராததால், அவர்களே பணியில் தொடர்ந்து வருகின்றனர். மாஜி அமைச்சர் விசாரணையில் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரனிடம் செயல்பாடுகளும் புகாராக பறந்தது. இதை அடுத்து அவர் பரங்கி மலைக்கு மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு துணை கமிஷனர் சத்ய பிரியா நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பொறுப்பெற்றுக் கொண்டார்.
இதை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் மாநகர போலீசில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சேலம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் அதிரடியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் தங்கவேல், திருநெல்வேலிக்கும், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கர், விழுப்புரத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர்கள் சங்கரேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான பணியிடம் ஒதுக்கப்பட வில்லை. இந்நிலையில் மாஜி அமைச்சருக்கு பரிவு காட்டிய இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உதவி கமிஷர்களின் பட்டியல், ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ்ஜியின் பார்வையில் உள்ளது. இந்த பட்டியலில் சேலம் மாவட்டத்தில் மட்டும், 22 இன்ஸ்பெக்டர்கள், 36 எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பணி மாற்றம் விரைவில் இருக்கும், என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பணி மாற்றம் நேர்மையான போலீசார் மற்றும் அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து உதவி கமிஷனர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்களை மாற்றிக் கொள்ள தயக்கம் காட்டினர். அதன் விளைவை தற்போது சந்தித்து வருகின்றனர். சில நாட்களாக சேலம் மாநகரில் நடந்த சம்பவங்கள், போலீஸ் துறைக்கு தலைக்குணிவை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. இதன் விளைவாக தற்போது அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. நேற்று வரை ஒரு உதவி கமிஷனர் ஒருவர், பத்து இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக சேலத்தில் பணி செய்து வரும் எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள், போலீசார் மாற்றம் செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


