PUBLISHED ON : ஜூலை 22, 2011 12:00 AM

அடுத்த வாரிசு ரெடி
காங்கிரசில் மீண்டும் ஒரு வாரிசு, அரசியல் களத்தில் குதித்துள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை தெரிவித்து, எதிர்க்கட்சியினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வரும், திக்விஜய் சிங்கின் மகன் தான், இந்த அடுத்த வாரிசு. திக்விஜய் சிங், ம.பி., மாநிலத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். 2003ல் நடந்த, சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, 'இனிமேல் தேர்தலில் நிற்க மாட்டேன்'என, சபதம் எடுத்தார். இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில், தற்போது தவிர்க்க முடியாத அரசியல்வாதி இவர். காங்கிரசின் வாரிசு கலாசாரம், திக்விஜய் சிங்கையும் விட்டு வைக்கவில்லை. தன் மகன், ஜய்வர்த்தனை அரசியல் களத்தில் இறக்கி விட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே, ஜய்வர்த்தன், முறைப்படி, காங்கிரசில் சேர்ந்தாலும், தற்போது தான், தீவிர அரசியலில் ஈடுபடத் துவங்கியுள்ளார். ரகோகார் கோட்டையில் உள்ள திக்விஜய் சிங்கின் வீட்டு முன், தினமும் ஏராளமான மக்கள் குவிந்து விடுகின்றனர். திக்விஜய் சிங், பெரும்பாலான நாட்கள், டில்லியில் இருப்பதால், ஜய்வர்த்தனை சந்தித்து, தங்கள் குறைகளை தெரிவிக்கின்றனர். அவரும், மிகவும் பொறுமையாகவும், அமைதியாகவும், மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை தீர்த்து வைக்கிறார். சில நேரங்களில், அவர்களுடன் கை குலுக்கி, கட்டி அணைக்கவும், ஜய்வர்த்தன் தவறுவது இல்லை. இதைப் பார்க்கும் திக்விஜய் சிங்கின் ஆதரவாளர்கள், 'அரசியல்வாதியாவதற்கான முழு தகுதியையும் பெற்று விட்டார், ஜய்வர்த்தன்' என, மெய் சிலிர்த்துப் போகின்றனர்.