தொலைபேசி ஒட்டு கேட்பால் அதிகாரிகள் தொடர் ராஜினாமா : முர்டோக் தனிமைப்படுத்தப்பட்டார்
தொலைபேசி ஒட்டு கேட்பால் அதிகாரிகள் தொடர் ராஜினாமா : முர்டோக் தனிமைப்படுத்தப்பட்டார்
தொலைபேசி ஒட்டு கேட்பால் அதிகாரிகள் தொடர் ராஜினாமா : முர்டோக் தனிமைப்படுத்தப்பட்டார்
லண்டன் : பிரிட்டனில் தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டின் கீழ், 'நியூஸ் ஆப் த வேர்ல்டு' பத்திரிகையின் நிர்வாக அதிகாரி ரெபெக்கா புரூக்ஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின், 'வால் ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகையின் வெளியீட்டாளர் லெஸ் ஹிண்டனும் ராஜினாமா செய்துள்ளார்.
தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டால், 'சாட்டிலைட் உரிமத்தை அவருக்கு வழங்கக் கூடாது' என, பிரிட்டன் பார்லிமென்டில் கட்சிப் பேதமின்றி எதிர்த்து ஓட்டளிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை அடுத்து, இதற்கான விண்ணப்பத்தை தானாக முன் வந்து முர்டோக் வாபஸ் பெற்றார். மேலும், தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டில், முர்டோக், அவரது மகன் ஜேம்ஸ் முர்டோக்கை விசாரிக்க, பிரிட்டன் எம்.பி.,க்கள் அனுப்பிய சம்மனை முர்டோக் ஏற்று, வரும் புதன் கிழமை பார்லிமென்ட் தேர்வு கமிட்டி முன் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். இத்துடன், நியூஸ் இன்டர்நேஷனல் செயல் அதிகாரி ரெபெக்கா புரூக்சையும் விசாரிக்க, சம்மன் அனுப்புவது குறித்து, பிரிட்டன் எம்.பி.,க்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், புரூக்சை தொடர்ந்து, அமெரிக்காவின், 'வால் ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகையின் வெளியீட்டாளர் லெஸ் ஹிண்டனும் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டனில் 13 வயது மில்லி டவ்லர் கொலை தொடர்பான வாய்ஸ்மெயில் ஒட்டு கேட்பு குற்றச்சாட்டையடுத்து, அவரது வீட்டிற்குச் சென்ற முர்டோக், குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார். அனைத்து பிரிட்டன் பத்திரிகைகளிலும், மன்னிப்பு தொடர்பான விளம்பரம் வெளியிட, முர்டோக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டதில் பலியானவர்களின் தொலைபேசி ரெக்கார்டுகளை வாங்குவதற்கு, 'நியூஸ் ஆப் த வேர்ல்டு' பத்திரிகையாளர்கள் முயற்சித்ததும், மேலும், 'ஒயர்டேப்' சட்டத்தை மீறி, அமெரிக்காவில் தொலைபேசி ஒட்டு கேட்பில், 'நியூஸ் ஆப் த வேர்ல்டு' பத்திரிகையாளர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில், முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான, 'வால் ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகை மற்றும் 'பாக்ஸ் நியூஸ்' 'டிவி' ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பிரிட்டனில் எழுந்த சர்ச்சையையடுத்து, அந்நாட்டில் வெளியாகி வரும், 'தி சன்', 'தி டைம்ஸ்', 'சன்டே டைம்ஸ்' ஆகிய பத்திரிகைகளை மூடுவதற்கு முர்டோக் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.