கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் மறியல்
கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் மறியல்
கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் மறியல்
ADDED : ஜூலை 12, 2011 12:23 AM
பரங்கிப்பேட்டை : சிதம்பரம் அருகே, கப்பல் கட்டும் தொழிற்சாலை கட்ட, மீனவ கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஐந்து நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வேளங்கிராயன்பேட்டை கிராமத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. அதற்காக வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், அன்னப்பன்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 500 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்கான மக்களின் கருத்துகேட்பு கூட்டம், வரும் 14ம் தேதி கலெக்டர் தலைமையில் வேளங்கிராயன்பேட்டை கிராமத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளங்கிராயன்பேட்டை கிராமத்தில், நேற்று கிராம தலைவர் ஏழுமலை தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் வரும் 15ம் தேதி வரை, ஐந்து நாட்கள் மீனவர்கள் எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் மறியல் செய்வது. கிராம மக்களுக்குத் தெரியாமல் நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் எவரும் பங்கேற்க கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கிராம நிர்வாகிகள், கலெக்டரை நேரில் சந்தித்து கப்பல் கட்டும் தொழிற்சாலை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.